Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

“விளையாட்டை விதைத்து ஒற்றுமையை அறுவடை செய்யும் ஈஷா கிராமோத்சவம்!” - கிராமத்து இளைஞரிடமிருந்து ஈஷாவிற்கு கிடைத்த பாராட்டு

மக்கள் இடையே இருக்கும் சாதி, மத மற்றும் இன அடையாளங்களை அழித்து ஒற்றுமையை கொண்டு வர விளையாட்டை ஒரு கருவியாக சத்குரு பயன்படுத்துகிறார் என்றால் அது மிகையல்ல. ஆமாம் சத்குருவால் துவங்கப்பட்ட ஈஷா கிராமோத்சவ திருவிழா விளையாட்டுகள் மூலம் கிராமங்களில் ஒற்றுமையை உருவாக்கி வருகிறது.

இது குறித்து முன்பு ஒரு முறை சத்குரு கூறுகையில், “ஈஷா கிராமோத்சவம், விளையாட்டின் மூலம் வாழ்க்கையை கொண்டாடும் ஒரு திருவிழா. விளையாட்டு, சமூகப் பிரிவுகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும்; இதுதான் விளையாட்டின் சக்தி. ஜாதி, மதம் மற்றும் பிற அடையாளங்களின் எல்லைகளை, உற்சாகமான விளையாட்டு மூலம் அழிக்க முடியும்.” எனக் கூறியுள்ளார்.

அந்த வகையில் இது குறித்து, ஈஷா கிராமோத்சவ போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த மிதுன் என்ற இளைஞரிடம் பேசினோம். அவர் கூறுகையில் “ஒவ்வொரு வருடமும் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்து கொள்கிறோம். இந்த வருடம் நாங்கள் இரண்டு அணிகள் மூலம் பங்கேற்றோம்.

ஆனால், ஒரு அணி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறிவிட்டது. மற்றொரு அணி கிளஸ்டர் அளவில் வெற்றி பெற்று, தஞ்சாவூரில் நடந்த டிவிஷனல் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆனால், தஞ்சாவூரில் சில தவிர்க்க முடியாத காரணங்களினால், நாங்கள் அந்தப் போட்டியிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.

எங்கள் அணியில் விளையாடிய இருவர் காவல்துறையில் வேலை பெற்றுள்ளார்கள். இதனால், விளையாட்டில் ஈடுபடுவது அரசு வேலைவாய்ப்புக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பல இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வெளியூர்களுக்கு விளையாடச் சென்றாலும், எங்கள் அணியில் வேறு அணியைச் சேர்ந்த வீரர்களைச் சேர்த்து விளையாடுவதில்லை.

ஈஷா கிராமோத்சவப் போட்டிகளைப் பொறுத்தவரை, ஒரே கிராமத்தைச் சேர்ந்த வீரர்களை ஒன்றிணைத்து விளையாட வைப்பது விதிமுறையாக உள்ளது. இது கிராம இளைஞர்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது. விளையாட தெரியாதவர்களையும் ஈஷா ஊக்குவிக்கிறது, இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

விளையாட்டை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அதனால், மது, பாக்கு, புகையிலை, போதைப் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில்லை. எங்கள் அணியில் மூன்று மூத்த வீரர்கள் மட்டுமே உள்ளனர். நாங்கள் மூவரும் இணைந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கைப்பந்து பயிற்சி அளித்து, புதிய வீரர்களை உருவாக்கி வருகிறோம். முன்பு எங்கள் ஊரில் விளையாடுவதற்கு மைதானம் இல்லை. அருகிலுள்ள ஊருக்கு சென்று விளையாடி வந்தோம்.

எல்லா இளைஞர்களும் ஒற்றுமையாக விளையாட வேண்டும் என்று எங்கள் ஊர்மக்கள் இணைந்து எங்களுக்கு மைதானம் அமைத்துத் தந்துள்ளனர். மைதானத்தில் மின்விளக்கு வசதியும் செய்து தந்துள்ளனர். இதனால், இரவு நேரத்திலும் விளையாட முடிகிறது. அவ்வப்போது போட்டிகளையும் நடத்தி வருகிறோம். எந்தவித பாகுபாடும் பார்க்காமல், விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இதனால், வீரர்கள் மட்டுமல்லாமல், ஊரே ஒற்றுமையாக உள்ளது.

வெளியிடங்களில் விளையாடச் சென்றால், நுழைவுக் கட்டணமாக ஐநூறு முதல் ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள். ஆனால், ஈஷா கிராமோத்சவப் போட்டிகளுக்கு ஒரு பைசா கூட கட்டணம் வாங்குவதில்லை. இலவசமாக விளையாட வைக்கிறார்கள். மேலும், வீரர்களுக்கு உணவு ஏற்பாடும் செய்கிறார்கள். இவையெல்லாம் ஈஷாவின் மீது எங்களுக்கு பெரும் மரியாதையை ஏற்படுத்துவதற்கு முக்கியக் காரணம்.” என அவர் கூறினார்.