* மைக்கேல் கிளார்க் கேன்சரால் அவதி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் (44), தோல் புற்றுநோய்க்கு (கேன்சர்) சிகிச்சை பெற்று வருகிறார். இவர், கடந்த 2004-2015 ஆண்டுகளில் ஆஸி அணிக்காக, 115 டெஸ்ட், 245 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 8,643 ரன்களும், ஒரு நாள் போட்டிகளில், 7,981 ரன்களும் குவித்துள்ளார். 2015ல், உலக கோப்பை வென்ற ஆஸி அணியின் கேப்டனாக செயல்பட்ட கிளார்க், அதன் பின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 2006ல் அவருக்கு தோல் புற்று நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமுதல், தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் பெற்று வரும் கிளார்க்கிற்கு, தற்போது 6வது முறையாக மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
* புரோ கபடி லீக் நாளை துவக்கம்
புதுடெல்லி: புரோ கபடி லீக் சீசன் 12 போட்டிகள், நாளை (ஆக.29) துவங்கவுள்ளன. சென்னை, ஜெய்ப்பூர் விசாகப்பட்டினம், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறும். தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி, தெலுகு டைடன்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கும் இத் தொடரில், ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 8 இடங்களை பெறும் அணிகள், பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும். வரும் 29ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கும் முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் - தெலுகு டைடன்ஸ் அணிகள் மோதுகின்றன.
* ஓடிஐ பேட்டிங் தரவரிசை: நம்பர் 1 சுப்மன்; நம்பர் 2 ரோகித்
லண்டன்: ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 756 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் தொடர்கின்றனர். பாக். வீரர் பாபர் அஸம் 739 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், இந்திய வீரர் விராட் கோஹ்லி 736 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் மாற்றமின்றி தொடர்கின்றனர்.