Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செய்தி தொடர்பாளர்களாக 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ஜெ.ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், பெ.அமுதா ஆகிய 4 பேரை நியமித்து ஜூலை 14ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த பாஜ ஆதரவு வழக்கறிஞர் டி.சத்தியகுமார் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,‘முறையாக அரசாணை பிறப்பித்து அரசிதழில் வெளியிடாமல், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமித்தது சட்டப்படி செல்லுபடியாக கூடியதல்ல. இதற்கு எந்த சட்ட பலமும் இல்லை.

அரசு அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுங்கட்சிக்கு சாதகமான தகவல்களை வெளியிடும் அபாயம் உள்ளது. இது அரசியல் சாசன கொள்கைகளுக்கு விரோதமானது. எனவே, 4 அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்திக் குறிப்பை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும்,’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பிறகு முதன்முறையாக தமிழகத்தில் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது சட்டவிரோதம் என்று மனுதாரர் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை. அலுவல் ரீதியாக மட்டுமே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் எந்த சட்டமும், விதிகளும் இல்லை. எனவே, இந்த வழக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.