அவனியாபுரம்: உறவாடி கெடுப்பது பாஜவின் மாடல் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று கூறியதாவது: சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் நடந்ததை போல குடியரசுத் தலைவர் தேர்தலிலும் வாக்குத்திருட்டு நடந்திருக்கிறதா என பிரதமர் தான் சொல்ல வேண்டும். அனைத்துக் கட்சியினரும் காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறக்கூடாது. விஜய்க்கு இருக்கும் அளவுகோல் தான் எடப்பாடிக்கும் இருக்கும். அதுதான் எங்களின் வேண்டுகோள். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு என்ன அதிகாரங்கள் இருக்கிறதோ அதில் தலையிடக்கூடாது.
அதிமுகவை உடைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியது உலக அதிசயமான வார்த்தை. அவர்கள் எங்கு உடைக்காமல் இருக்கிறார்கள். மகாராஷ்டிராவிற்கு சென்றார்கள். அங்கு இருக்கக்கூடிய வலுவான தலைவரின் குடும்பத்தை பாஜ சிதைத்தது. பால்தாக்கரேவிற்கு பிறகு அவரது மகன் உத்தவ் தாக்கரே ஆட்சி செய்தார். அந்த சிவசேனாவை இரண்டாக உடைத்து ஷிண்டே சிவசேனாவை உருவாக்கியது. அதற்குப் பின்பு இந்த ஷிண்டே சிவசேனாவை மூடிவிட்டு பாஜ முதல்வரை கொண்டு வந்திருக்கிறார்கள். உறவாடி கெடுப்பது பாஜவின் மாடல். ஆமை புகுவதைப் போல பாஜ புகுந்த மாநிலம் சிதைந்து போகும். இவ்வாறு கூறினார்.