மும்பை: காண்ட்லா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டவுடன் மும்பைக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் கியூ 400 விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால், 75 பேருடன் வந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிறங்கியது. காண்ட்லாவில் இருந்து பிற்பகல் 2.38 மணிக்கு 75 பேருடன் விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் வெளிப்புற சக்கரம் கழன்று ஓடு பாதையில் விழுந்தது. இதையடுத்து மும்பை விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிற்பகல் 3.51 மணிக்கு மும்பை சென்ற விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று மும்பை விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார். இந்த பரபரப்பால் மும்பை விமான நிலைய செயல்பாடுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.