Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வன்ம பேச்சு

உடல் நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21ம் தேதி தன்கர் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை இருந்தது. இதனால் காலியாக உள்ள துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் ஆணையம் செப்.9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 394 ஓட்டுகள் தேவை. தற்போது, 543 உறுப்பினர்கள் கொண்ட லோக்சபாவில், மேற்கு வங்கத்தில் ஒரு எம்.பி., `சீட்’ மட்டும் காலியாக உள்ளது. 245 உறுப்பினர்கள் கொண்ட ராஜ்யசபாவில் 5 எம்.பி. சீட்கள் காலியாக உள்ளன. இவரது ராஜினாமா பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நல பிரச்னையால் தனிப்பட்ட முறையில் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல் முறையாக விளக்கம் அளித்தார். ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவுக்கு வேறு காரணங்களை தேடுவது சரியல்ல என தெரிவித்தார். இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். என்டிஏ கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிற்கிறார். இதற்கிடையே கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, ``இந்தியா கூட்டணி’’, நக்சலைட்டுகளின் தீவிர ஆதரவாளரான சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளது.

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிராக போராட பழங்குடி இளைஞர்களை கொண்டு அரசாங்கம் உருவாக்கிய `சல்வா ஜூடும்’ சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி 2011ல் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பை அவர் வழங்கியிருக்காவிட்டால், சல்வா ஜூடும் நடைமுறையில் இருந்திருந்தால், நக்சலைட் இயக்கம் 2020ம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும். இடதுசாரிகளின் அழுத்தத்தின் பேரில் தான் காங்கிரஸ் கட்சி நீதிபதி சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இவரது பேச்சு நீதித்துறையின் மாண்பை கேள்விக்குட்படுத்துவதாக கூறி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த சுதர்சன் ரெட்டி, \\”அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது, என்னால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது அல்ல. விவாதத்தில் கண்ணியம் இருக்க வேண்டும்’’ என கூறினார். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற 18 நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியை கண்ணியத்துடன் விமர்சிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த வாரம் நெல்லையில் நடந்த பாஜ முகவர்கள் கூட்டத்தில், திமுக அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என அமித்ஷா பேசி உள்ளார். திமுக, கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் மக்கள் பணியை ஆற்றி வருகிறது என்பதை மறந்துவிட்டு பேசி உள்ளார். எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சி போன்று அமித்ஷா பாவிக்கின்றார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுகளுக்கு எதிராக கொள்கை மற்றும் கருத்தியலுக்கு எதிராக பேச வேண்டுமே தவிர வார்த்தைகளால் வன்மத்தை விதைக்கக்கூடாது. கடந்த கால வரலாற்றில் தொடர்ந்து வன்மமான பேச்சு என்பது அழிவை தான் தரும் என்பதை மறந்துவிடக்கூடாது.