Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு ‘போர்ட்டோமேட்’ பாதை: புதிய தொழில்நுட்பத்தில் அமைகிறது

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான சிறப்பு ‘போர்ட்டோமேட்’ பாதை அமைக்கப்படவுள்ளது. மெரினாவில் கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகள் ரசிப்பதற்காக சிறப்பு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை 235 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்டது. இது ‘நம்ம சென்னை’ செல்பி பாயின்ட் பின்புறம் அமைந்துள்ளது. இதன் நோக்கமானதும் மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் கடற்கரையை எளிதாக அணுகி, கடல் அலையை அருகில் சென்று ரசிக்கும் வகையில் வசதி செய்வது ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகளும் வாங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்த நடைபாதை தொழில்நுட்ப உதவியுடன் முற்றிலும் மாற்றப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்தது. ஏனென்றால் மழை, காற்றால் இந்த மரப்பாலம் முற்றிலுமாக மணலால் நிரம்பி விடுகிறது. இதனால் தூய்மை பணியாளர்களால் அதனை அப்புறப்படுத்த கடினமாக உள்ளது.

இதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட இந்த பாதையில் பொதுமக்களும் நடந்து சென்று, கட்டைகளை உடைக்கின்றனர். ஆகையால் இதற்கு முடிவு கட்டும் வகையில் மணல் சிக்கலை தீர்க்கும் புதிய தொழில்நுட்பம் (போர்ட்டோமேட்) அமைக்கப்பட உள்ளது. தற்போது ‘போர்ட்டோமேட்’ எனப்படும் ரப்பர் வகை மேட்கள் பயன்படுத்தவுள்ளன. இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு மணலில் எளிதாக நடந்து கடலை ரசிக்க உதவும். தங்கள் சொந்த வாகனங்கள் (வீல் சேர்) வைத்திருப்பவர்கள்கூட இந்த மேட்கள் மூலம் எளிதாக பயணிக்கலாம். புதியதாக நிறுவப்பட்டு வரும் இந்த மேட்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த மறுசுழற்சி செய்யக்கூடிய பொருளால், அதாவது வீணான பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த மேட்களின் தன்மை காரணமாக, இவை வெயிலுக்கும் மழைக்கும் பாதிப்படையாமல், நீண்ட காலம் தாக்குப்பிடிக்க கூடியவை (லாங் லைப்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் நலனுக்காக மெரினா கடற்கரை பகுதிகளில் அமைக்கப்படும் இந்த பாதைகள், ப்ளூ பிளாக் திட்டத்தின் கீழ் வருகின்றன. இந்த நடைபாதைள் தற்போது மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு பூங்கா பகுதிகளிலும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் ரூ.80 லட்சம் முதல் 90 லட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ப்ளூ பிளாக் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளும் மெரினா கடற்கரையில் உள்ள விளையாட்டுப் பகுதிகளுக்கு செல்ல ரப்பர் வகை மேட்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம், அவர்கள் தங்கள் சக்கர நாற்காலியிலேயே சென்று விளையாடும் வசதியையும் பெறுவார்கள்.

இதில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்லலாம். தூய்மை பணியாளர்களுக்கும் வேலை சுலபமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது இவை சோதனை முறையில் அமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் வரும் நாட்களில் புதிதாக 2 கட்டங்களாக அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக கடல் அலையை ரசிப்பதற்காகவும், 2ம் கட்டம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மெரினா கடற்கரையில் உள்ள விளையாட்டு பூங்காவில் விளையாட செல்லும் வழியில் அமைக்கப்படவுள்ளது.