Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறப்பு முகாம்கள் மூலம் கடந்த ஒரு மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: 71,475 நாய்களுக்கு கருத்தடை; சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: கடந்த ஒரு மாத காலத்தில் சென்னையில் 46,122 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் தெருநாய் தொல்லைகள் தொடர்பான புகார்களை 1913 என்ற உதவி எண்ணிலும், சென்னை மாநகராட்சியின் மக்கள் சேவைக்கான வாட்ஸ்அப் எண் 94450 61913 வாயிலாகவும் தெரிவிக்கலாம். நாய்களை முறையாகப் பிடித்து விடுவிப்பதை உறுதி செய்வதற்காக இதுவரை 12,255 தெருநாய்களுக்கு க்யூஆர் குறியீடு காலர்கள் மற்றும் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. தெருக்களில் பிடிக்கப்படும் தெருநாய்கள் சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்பட்டு வரும் புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் உள்ள நாய் இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தெருநாய்களை பரிசோதித்து, உடற்தகுதியுள்ள தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு 4 முதல் 6 நாட்கள் வரை பராமரிக்கப்படுகிறது. அவ்வாறு பராமரிக்கப்படும் நாய்களுக்கு செறிவூட்டப்பட்ட உணவும், சமைத்த அசைவ உணவும் வழங்கப்பட்டு வருகிறது. ரேபிஸ் நோய் பாதிப்புள்ளதாக சந்தேகிக்கப்படும் நாய்கள் தனிக் கூண்டுகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2021 முதல் 2025 செப்.15ம் தேதி வரை 88,439 தெருநாய்கள், 46,235 செல்லப் பிராணிகள் என மொத்தம் 1,34,674 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும், இதில் கருத்தடை செய்ய தகுதியுள்ள 71,475 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண் நாய்களை அதிக எண்ணிக்கையில் பிடித்து அவற்றிற்கு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பணியை தொய்வின்றி மேற்கொள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கூடுதலாக 10 எண்ணிக்கையிலான நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஆக.9ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களின் வாயிலாக இதுவரை மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய 5 மண்டலங்களில் இப்பணி நிறைவு பெற்று, மொத்தம் 46,122 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து அளிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செல்லப்பிராணி உரிமையாளர்கள் செல்லப்பிராணி உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.செல்லப்பிராணி உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக உரிமம் பெற செல்லப்பிராணியின் உரிமையாளர் புகைப்படம், முகவரிச் சான்று, செல்லப்பிராணி புகைப்படம் மற்றும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும். பதிவேற்றப்பட்ட விவரங்கள் மண்டல கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு, ரூ50/-ஆண்டு கட்டணம் பெறப்பட்டு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தெருநாய்களை பரிசோதித்து, உடற்தகுதியுள்ள தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு 4 முதல் 6 நாட்கள் வரை பராமரிக்கப்படுகிறது.

* ரேபிஸ் நோய் பாதிப்புள்ளதாக சந்தேகிக்கப்படும் நாய்கள் தனிக் கூண்டுகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

* பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செல்லப்பிராணி உரிமையாளர்கள் செல்லப்பிராணி உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

* 13,287 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கல்

இதுவரை இணைய வழியாக 13,287 செல்லப்பிராணி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், செல்லப்பிராணி உரிமம் வழங்கப்படும்போதே அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் மைக்ரோ சிப்பிங் செலுத்துவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை தடுக்கவும் இயலும்.

* 2 லட்சம் தரவுகள் சேமிக்க நடவடிக்கை

2,00,000 எண்ணிக்கையிலான செல்லப்பிராணிகள் மற்றும் நாய்களின் தரவுகளை சேமித்தல் மற்றும் மேலாண்மை செய்தல், பிரத்யேக மென்பொருள் உருவாக்குதல், விரிவான தளத்தை வடிவமைத்தல், செயல்படுத்துதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல், நாய் பிடிப்பவர்களுக்கான மொபைல் செயலியை உருவாக்குதல், செல்லப்பிராணிகளுக்கான உரிமம் வழங்கும் போர்டல் உருவாக்குதல், பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகிய பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

செல்லப்பிராணி உரிமம் பெற நிபந்தனைகள்

* கட்டுப்படுத்தப்பட்ட இனப்பெருக்கம், தடுப்பூசி, கருத்தடை மற்றும் உரிமம் ஆகியவற்றிற்கு செல்லப்பிராணியின் உரிமையாளர் பொறுப்பு ஏற்க வேண்டும்.

* சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள எந்தவொரு சாலை, தெரு, சாக்கடையிலும் தனது நாய் செல்லப்பிராணியை கழிவு ஏற்படுத்த எந்த உரிமையாளரோ அல்லது நாயின் பொறுப்பாளரோ அனுமதிக்கக் கூடாது. ஏதேனும் நாய் சாலை /தெரு/சாக்கடையில் கழிவு ஏற்படுத்துவது கண்டறியப்பட்டால், அக்கழிவை சுத்தம் செய்து முறையாக அப்புறப்படுத்துவது சம்பந்தப்பட்ட உரிமையாளரின் கடமையாகும்.

* தங்கள் செல்லப்பிராணிகளை மற்றவர்களுக்கு தொந்தரவு அல்லது பொது சுகாதார ஆபத்தை ஏற்படுத்தாமல் வைத்திருக்க வேண்டும். மேலும், செல்லப் பிராணிகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் அழைத்துச் செல்லும் போது கழுத்துப் பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும், பொது இடங்களில் முகமூடி இல்லாமல் திரிய விட்டாலோ அல்லது அழைத்துச் சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.