தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 760 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து 565 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம் என பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு மாவட்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின்போது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். தற்போது தீபாவளி பண்டிகை வருகிற 20ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பலரும் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகள், ரயில்கள் மற்றும் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க தொடங்கிவிட்டனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 20, 378 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே அரசு பஸ்களில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேரூந்துகளுடன், 760 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து 565 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இதனிடையே , தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் 1,26,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதாவது 16ம் தேதி இன்று வியாழக்கிழமை 16,000 பேர், 17ம் தேதி வெள்ளிக்கிழமை 51, 500 பேர், 18ம் தேதி சனிக்கிழமை 47, 500 பேர், 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11, 500 பேர் என மொத்தம் 1,26,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.