சிறப்புத் திருத்த படிவங்களை வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமே விநியோகித்து திரும்பப்பெற வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தல்
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடி மற்றும் விண்ணப்ப படிவங்கள் விநியோகம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீதரை சந்தித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர். பின்னர் நிருபர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது: விதிகளின்படி வாக்களார்களுக்கான படிவத்தை வாக்குச்சாவடி அலுவலர்கள் தான் வழங்கவும், திரும்ப பெறவும் வேண்டும். வெளிப்படைத்தன்மையோடு வாக்களார் பட்டியல் இருக்க வேண்டும். ஆனால் பல மாவட்டங்களில் ஆளுங் கட்சியினர் வாக்குச்சாவடி அலுவலர்களை மிரட்டி அவர்களே வாக்களார்களிடம் படிவங்களை வழங்குகின்றனர். இது எந்த வகையில் நியாயம்?
எனவே படிவங்களை திரும்ப பெறும்போது அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்களை படிவங்கள் வாங்க அனுமதிக்க கூடாது. வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமே படிவங்களை கொடுக்கவோ, திரும்ப பெறவோ வேண்டும் என கூடுதல் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடி அலவலர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் தவறில்லை, ஆனால் அவர்களே படிவங்களை கொடுக்க கூடாது. 1200 வாக்குகளுக்கு ஒரு வாக்குச்சாவடி உள்ளன. வீடுகளை கணக்கு பார்த்தால் 300 முதல் 400 வீடுகள்தான் இருக்கும். தேர்தல் நேரத்தில் பூத் சிலிப்பையே 4, 5 நாளில் கொடுத்துவிடுகிறோம். அப்படி இருக்கும்போது சிறப்பு தீவிர திருத்தத்திற்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது போதுமானது இல்லையா.
தீவிர சிறப்பு திருத்தம் மூலம் வாக்காளர்ளை பட்டியலில் இருந்து நீக்க முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே விண்ணப்பம் வழங்குகின்றனர். சிறப்பு திருத்தத்தில் தவறு நடக்க அதிமுக அனுமதிக்காது. திமுகவிற்கும் - த.வெ.கவிற்கும் இடையேதான் போட்டி என விஜய் கூறி வருவதற்கு, தலைவர்கள் புதிதாக கட்சி ஆரம்பிக்கும்போது தங்கள் கட்சிக்கென தனித்தன்மை வேண்டும் என்றுதான் நினைப்பர்கள். அதன்படி அவர் பேசியிருக்காலம் முதலமைச்சர் வேட்பாளர் நான்தான் என கூறலாம். ஆனால் யார் முதல்வராக வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
