வாக்குரிமை இழப்பதை தடுக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு யாரும் தடை கோரவில்லை: காங்கிரஸ் விளக்கம்
புதுடெல்லி: பீகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, பீகாரில் உள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகள் மற்றும் ரேஷன் கார்டுகளை தேர்தல் ஆணையம் இப்போது சேர்க்க வேண்டும். இது பெரும்பான்மையான வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கப்படுவதைத் தடுக்கும். இந்த நடவடிக்கைக்கு மனுதாரர்கள் யாரும் தடை கேட்கவில்லை என்பதை இந்த உத்தரவின் 7ம் பக்கம் தெளிவுபடுத்துகிறது என கூறியுள்ளார். இது குறித்து பாஜ ஐடி துறை தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில்,‘‘ உச்சநீதிமன்றத்தின் கருத்தை தவறாக புரிந்து கொள்வதை நிறுத்துங்கள். கூடுதல் ஆவணங்களை ஏற்று கொள்ள நீதிமன்றம் கட்டாயப்படுத்தவில்லை. அவற்றை பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.