சென்னை: ஆடி பெருக்கை முன்னிட்டு, சென்னையில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. அதன்படி, ஆடி மாதத்திற்கு பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. குலதெய்வ வழிபாடும், அம்மன் வழிபாடும் என ஆடி மாதத்தில் பல சிறப்பு உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆடி மாதத்தின் 18ம் நாளான ஆடி பெருக்கு விழா நேற்று பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும் இந்த விழா, இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.
அதுமட்டுமின்றி, தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்படும் இவ்விழா, பெண்களின் விழாவாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் கொண்டாடப்பட்டது. காவிரி, தாமிரபரணி போன்ற ஆறுகளின் கரையோரங்களில் மக்கள் கூடி, வாழை இலையில் பூக்கள், மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை-பாக்கு, பச்சரிசி, பன்னீர் ஆகியவற்றை படையலாக வைத்து காவிரி தாயை வழிபட்டனர். சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றிக்கொள்ளுதல், புதுமண தம்பதிகள் நீர்நிலைகளில் நீராடி வழிபாடு செய்தல் போன்ற சடங்குகளும் நடந்தன.
மேலும், ஆடிப்பெருக்கு அன்று அம்மன், முருகன் உள்ளிட்ட கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அழகு குத்தியும், தேர் இழுத்தும், நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் மொட்டை அடித்து அருகே உள்ள குளத்தில் குளித்துவிட்டு முருகனை சாமி தரிசனம் செய்தனர். அந்த வகையில், சென்னையிலும் ஆடிப்பெருக்கு உச்சாகமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மூலவர் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல குன்றத்தூர் முருகன் கோயில், திருப்போரூர் முருகன் கோயில் என சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான முருகன் கோயில்கள் உள்ளன. சிறப்பு வழிபாடும் நடந்தது. அத்துடன் அம்மன் கோயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில், காளிகாம்பாள் கோயில், செங்குன்றம் கங்கையம்மன் கோயில், சிந்தாதிரிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோயில், சூளை முத்துமாரியம்மன் கோயில், சென்னை ஆதிசேமாத்தம்மன் கோயில் ஆகிய அம்மன் கோயில்களில் காலை முதல் மக்கள் தரிசனம் செய்தனர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவதால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.