Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்(SIR) வருகிற 4ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும். ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்ய தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல.

எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் இதனுள் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். பீகாரில் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தன. பீகாரில் ஒரே தொகுதியில் 80,000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டினார். இது போன்ற எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். போராட வேண்டும். இது தமிழ்நாட்டுக்கான பிரச்னை ஆகும். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களும் இதனை உன்னிப்பாக கண்காணித்து தடுத்தாக வேண்டும். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2ம் தேதி(நாளை) காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிவித்தன.

அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10 மணியளவில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமன்றி கூட்டணியில் இல்லாத கட்சி தலைவர்களையும் அழைக்கும்படி திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கூட்டணியில் அல்லாத தவெக, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழு தலைவர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமா? என்பது நாளைய கூட்டத்தில் தெரியவரும். இதனால், நாளைய கூட்டத்தில் யார், யார் பங்கேற்க போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகள், ஆலோசனைகள் அடிப்படையில் அடுத்த கட்ட செயல்பாடுகள் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.