சிறப்பு தீவிர திருத்தம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுவது அதிகார வரம்பை மீறுவதாகும்: உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம்
புதுடெல்லி: ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாக, வழக்கமான இடைவெளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கான எந்தவொரு உத்தரவும் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாகும் என உச்ச நீதிமன்றம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் வழக்கமான இடைவெளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி பாஜவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ‘வழக்கமான இடைவெளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான எந்தவொரு உத்தரவும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாகும். திருத்தக் கொள்கையில் தேர்தல் ஆணையத்திற்கு முழுமையான விருப்புரிமை உண்டு. அரசியலமைப்பின் 324வது பிரிவின் கீழ் வாக்காளர் பட்டியல்களை தயாரித்தல், தேர்தல்களை நடத்துவது தொடர்பான அனைத்து விஷயங்களிலும் தேர்தல் ஆணையத்திற்கான முழுமையான அதிகாரத்தின் அடித்தளத்தை உருவாக்குகிறது’ என கூறப்பட்டுள்ளது.