* ஓராண்டாகியும் சாலை போடாததால் அவதி
* தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை
*சாலைகள் பாதிப்புகள் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
*கண்டமங்கலம் மற்றும் கோலியனூர் வட்டாரங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் புயலில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்காமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் சேதமடைந்த கிராமப்புற சாலைகளை சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டன.
குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவு பெய்த மழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அதிக பாதிப்புகளை இந்த மாவட்டம் சந்தித்தது.
இதில் ஏரி, குளங்கள் உடைப்பு ஏற்பட்டும், சாலைகள் பல கி.மீ. தூரத்துக்கு சேதமடைந்து காணப்பட்டன. அதேபோல் புயல், மழைக்கு 16 பேர் உயிரிழந்தனர். அதேபோல் 42 மாடுகள், 440 ஆடுகள், 151 கன்றுக்குட்டிகள் இறந்தன. 2,500 வீடுகள் பகுதியளவும், 380 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்தன.
அதேபோல் 2 லட்சத்து 400 ஏக்கர் விளைநிலங்கள், 1,08,715 ஏக்கர் விளைநிலங்கள் 33 சதவீதத்துக்கு மேலாக சேதமடைந்தன. இதனால் 1,16,486 விவசாயிகள் பாதிப்படைந்தனர். தோட்டக்கலைத்துறையில் 71,275 ஏக்கர் தோட்டக்கலைப்பயிர்கள் முழுமையாகவும், 4 ஆயிரம் ஏக்கர் தோட்டப்பயிர்கள் 33 சதவீதத்துக்கு மேலாகவும் பாதிப்புக்குள்ளானது. சுமார் 13,857 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள், கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தன. மேலும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 340 கி.மீ. தூர சாலைகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான 500 கி.மீ. தூரத்துக்கும் மேலான சாலைகள் புயல், வெள்ளத்தில் சேதமடைந்தன. இதில் உடைப்பு ஏற்பட்ட ஏரிகளில் தற்காலிக சீரமைப்பு மற்றும் நிரந்தர பணிகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் சேகரிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டன.
அதேபோல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேதமடைந்த சாலைகள் விரைந்து சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண தொகையும் வழங்கப்பட்டது.
கால்நடைகள் மற்றும் சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் புயலில் சேதமடைந்த கிராமப்புற சாலைகள் இன்னும் பல இடங்களில் சீரமைக்கப்படாமல் உள்ளது.
குறிப்பாக கண்டமங்கலம் மற்றும் கோலியனூர் வட்டாரங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் புயலில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்காமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. தற்போதைய மழைக்காலங்களில் மேலும் சாலைகள் பாதிப்புகள் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் புயல், மழையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு ெசய்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி இந்த தொகுதி எம்எல்ஏ லட்சுமணன் ஏற்கனவே பட்டியலுடன் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
எனவே விழுப்புரம் சட்டமன்ற தொகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி புயல் மற்றும் மழையால் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.


