ஊட்டி : வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை சரிவர பராமரிப்பது தொடர்பாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக மாவட்ட அளவிலான முகாம் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது.
இம்முகாமிற்கு வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைத்தார்.
இம்முகாமில், 7 உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையான டிராக்டர், பவர் டில்லர், பவர் வீடர், தேயிலை அறுவடை இயந்திரம் போன்ற வேளாண் இயந்திரங்கள், மின் மோட்டார், புற்கள் வெட்டும் கருவிகள், சுழல் கலப்பை, மருந்து தெளிப்பான் மற்றும் இதர கருவிகள் மற்றும் சூரிய சக்கதி பம்செட் போன்ற கருவிகளை பராமரிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.
இதில், கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியை சேர்ந்த 45 மாணவர்களும், ஜோசப் ஐடிஐ கல்லூரியை சேர்ந்த 30 மாணவர்களும் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்றனர்.
மேலும், முகாமில், 10 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் ரூ.9.07 லட்சம் மானியத்தில் வழங்கினார்.