சபாநாயகர் பதவியை கைப்பற்ற பாஜக - நிதிஷ் கட்சி மோதல்; பீகாரில் அரசு அமைப்பதில் தொடரும் இழுபறி: டெல்லியில் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
புதுடெல்லி: பீகாரில் புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. நிதிஷ்குமார் 10வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.
புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா வரும் 20ம் தேதி (நாளை மறுநாள்) பாட்னாவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியும் விழாவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கூட்டணி கட்சிகளிடையே முக்கிய இலாக்காக்களைப் பங்கீடு செய்வது குறித்த பேச்சுவார்த்தைகள் டெல்லியில் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில், சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் இரு பெரும் கட்சிகளுக்கும் இடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது.
சட்டமன்றத்தில் 89 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக, சபாநாயகர் பதவியை மீண்டும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ‘முதலமைச்சர் பதவி ஐக்கிய ஜனதா தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால், அதிகாரப் பகிர்வைச் சமநிலைப்படுத்த சபாநாயகர் பதவியை எங்களுக்கே தர வேண்டும்’ என பாஜக தரப்பு வாதிடுகிறது. முன்னாள் சபாநாயகரும், துணை முதலமைச்சருமான விஜய் குமார் சின்ஹாவின் பெயர் மீண்டும் இந்தப் பதவிக்குப் பரிசீலிக்கப்படுகிறது.
ஆனால், 85 இடங்களைக் கொண்டுள்ள ஐக்கிய ஜனதா தளம், இம்முறை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுப்பதாக இல்லை. ‘ஏற்கனவே சட்ட மேலவைத் தலைவர் பதவி பாஜகவிடம் உள்ளதால், இரு அவைகளிலும் அதிகாரத்தைச் சமமாகப் பங்கிடும் வகையில், சட்டமன்ற சபாநாயகர் பதவியை எங்களுக்கே ஒதுக்க வேண்டும்’ என்பது அக்கட்சியின் வாதமாக உள்ளது. மேலும், அமைச்சரவையில் ஒவ்வொரு ஆறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், தலா ஒரு அமைச்சர் பதவி என்ற பார்முலா வகுக்கப்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சர் பதவியை பாஜகவிற்கு ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


