புதுடெல்லி: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பை காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகமழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நான்கு மாத தென்ேமற்கு பருவமழைக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த பருவத்தின்போது நாட்டில் வழக்கமாக 868மி.மீ மழை அளவு பதிவாகும். ஆனால் இந்த முறை 937மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இது 8 சதவீதம் அதிகமாகும். கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 1089.9மி.மீ. மழை பதிவாகி உள்ளது இது இயல்பாக பதிவாகும் 1367 மி.மீ. காட்டிலும் 20 சதவீதம் குறைவாகும். பீகார், அருணாச்சலம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் நான்கு மாதங்களில் மூன்று மாதங்கள் பற்றாக்குறையாகவே பருவ மழை பெய்துள்ளது.
கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இந்த பருவமழை 1901ம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது மிக குறைந்த மழைப்பொழிவாகும். வடமேற்கு இந்தியாவில் 747.9மி.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 587.6மி.மீ. அதிகமாகும். இது 2001ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்சம். தென்னிந்தியாவில் இயல்பான மழையான 716 மி.மீயைவிட 9.9 சதவீத அதிக மழை பதிவாகி உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* அக்டோபரில் அதிக மழை
இன்று தொடங்கும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் இயல்பை காட்டிலும் 15சதவீதம் அதிக மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அக்டோபரில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைக்காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளை தவிர, பருவமழைக்கு பிந்தைய காலத்தில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு, கடலோர ஆந்திரா, ராயலசீமா, கேரளா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதிகள் இயல்பை காட்டிலும் அதிகமாக மழை பொழிவைபெறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.