சென்னை: வங்கக் கடல் பகுதியில் காற்று சுழற்சி நீடிப்பதாலும், தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவ ட்டங்களில் தீவிரமாக உள்ளதாலும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமாக பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் தீவிரமாக பெய்து வருகிறது.
இருப்பினும், மதுரை விமான நிலையம், திருநெல்வேலி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்தும், இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தென்னிந்திய பகுதிகள், ராயலசீமா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல காற்று சுழற்சிகள் நிலை கொண்டு இருப்பதால், நேற்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அங்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநிலை, 9ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் இன்று பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.