கோவை அவினாசி ரோட்டில் ஜி.டி.நாயுடு பெயரில் அமைக்கப்பட்டுள்ளது தென்னிந்தியாவின் நீண்ட மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோவை: கோவை அவினாசி ரோடு ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் கோவையின் அடையாளமாக மாறியிருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை வருகை தந்தார். தமிழக நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் சார்பில் அவினாசி ரோட்டில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 1791.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தினை திறந்து வைத்தார். ‘ஜிடி நாயுடு’ மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்ட இந்த பாலத்தை திறந்து வைத்த பின்னர் சிறிது தூரம் பாலத்தில் நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த மக்களை சந்தித்து பேசினார். பின்னர் முதல்வர் மேம்பாலத்தின் மொத்த தூரமான 10.1 கி.மீ காரில் பயணம் செய்தார். கோல்டு வின்ஸ் பகுதியில் துவங்கி உப்பிலிபாளையம் சிக்னல் முன் மேம்பாலம் முடிகிறது. அதிக வளைவு இன்றி நேராக எலிவேட்டர் காரிடர் என்ற முறையில் இந்த மேம்பாலம் திட்டமிட்டு அமைக்கப்பட்டது.
மாநில நெடுஞ்சாலைத்துறையின் திட்ட பிரிவு சார்பில் பணிகள் நடத்தப்பட்டது. இந்த மேம்பாலத்தில் விமான நிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா, அண்ணா சிலை என 4 இடங்களில் ஏறு தளம் மற்றும் இறங்கு தளம் இருக்கிறது. தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் நீண்ட மேம்பாலமாக இந்த மேம்பாலம் இடம் பிடித்துள்ளது. அவினாசி ரோட்டில் ஜிடி நாயுடு மியூசியம் அமைந்துள்ளது. ஜிடி நாயுடு போக்குவரத்து வாகனத்தை வடிவமைத்து இந்த அவினாசி ரோட்டில் இயக்கி சாதனை படைத்தார். அவரின் நினைவாக அவரின் பெயரை வைத்தது கோவை மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. 50 ஆண்டிற்கு முன் கலைஞர் அவினாசி ரோட்டில் மில் ரோடு சந்திப்பில் மேம்பாலத்தை கட்டினார். அதே அவினாசி ரோட்டில் அவரின் மகன் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் நீண்ட மேம்பாலத்தை கட்டி திறந்து வைத்துள்ளார். இந்த சாதனையை ஒப்பிட்டு கோவை மக்கள் மகிழ்ச்சியான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.