சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய அட்டவணை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ரயில் சேவை தொடர்பாக புதிய தகவல்கள், மாற்றங்கள் உள்ளிட்டவற்றுடன் ரயில் அட்டவணை வெளியிடப்படும். இவை ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும். இது வழக்கமாக பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். அந்த வகையில் 2025ம் ஆண்டிற்கான புதிய ரயில் அட்டவணையை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள 44வது பதிப்பான “Trains at a Glance” நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஜனவரி 1, 2025 (இன்று) முதல் புதிய ரயில் அட்டவணை அமலுக்கு வந்துள்ளது. இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ள புதிய ரயில் அட்டவணையில் ரயில் வழித்தட வரைபடம், ரயில் நிலையம் மற்றும் ரயில்களின் எண்கள், ரயில்களின் பெயர், பயண நேரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக விவரங்கள், தட்கல், டிக்கெட் கட்டணம் திரும்ப பெறும் முறைகள், ரயில் பயண சலுகைகள், சிறப்பு பயண திட்டங்கள் ஆகியவையும் இருக்கின்றன.
2025 ரயில் அட்டவணையில் புதிதாக 136 வந்தே பாரத் ரயில்கள், 2 அம்ரித் பாரத் ரயில்கள், நமோ பாரத் ரயில் உள்ளிட்டவை படிப்படியாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக 10 ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள 19 ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. 5 ரயில்களின் பயண எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 144 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சோதனை அடிப்படையில் 45 எக்ஸ்பிரஸ் ரயில்களை பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
44 எக்ஸ்பிரஸ் ரயில்களில் நிரந்தரமாக 58 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 28 எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏற்கனவே இருந்த பெட்டிகளுக்கு பதிலாக 343 லிங்கே ஹாப்மன் புஸ்ச் (எல்எச்பி) ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 62 எக்ஸ்பிரஸ் ரயில்களில் 102 இரண்டாம் வகுப்பு பெட்டிகளை நிலையாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 16 ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு ரயிலுக்கு மட்டும் வார பயண நாட்களின் எண்ணிகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.