தென்மாவட்டங்களில் விடிய விடிய கொட்டிய மழை: பல இடங்களில் வெள்ளம், வீடுகள், பள்ளிக்கூடம் இடிந்தன, பல்லாயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம், இருவர் பலி
சென்னை: தென்மாவட்டங்களில் விடிய விடிய கொட்டிய மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள், பள்ளிக்கூடம் இடிந்தன. பல்லாயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தன. மழைக்கு இருவர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. இதனால், கம்பம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தெருக்களில் மழைநீர் புகுந்தது.
கம்பம்மெட்டு ரோட்டில் உள்ள 18ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் புகுந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன. கம்பம் அருகே, கூடலூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் தனியார் மேலாண்மை அரசு உதவி பெறும் பள்ளிக்கூட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் சேதம் ஏற்படவில்லை. நேற்று அதிகாலை மூல வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. ஆற்றில் கரைபுரண்டு வந்த வெள்ள நீர் வருசநாடு-கடமலைக்குண்டு இடையே சாலையில் பல்வேறு இடங்களில் புகுந்தது.
இதனால் நேற்று அதிகாலை 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடை ஏற்பட்டது. முல்லையாற்றில் வெள்ளம் கரையை கடந்து பெருக்கெடுத்து ஓடியதில் கரையில் இருந்த கொட்டகை முழுமையாக வெள்ளநீர் சூழ்ந்து மூழ்கியது. மேலும், வீரபாண்டியில் உள்ள கண்ணீஸ்வரமுடையார் கோயிலுக்குள் வெள்ளநீர் நுழைந்ததால், கோயில் மூடப்பட்டது. சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கின. தென்னை மரங்கள், வாழை மரங்கள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கி நாசமாகின.
தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், மாடசாமி கோயில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (55), சகோதரர்கள் பாலகிருஷ்ணன், மகாதேவன் ஆகியோருடன், நேற்று முன்தினம், ராக்காச்சி அம்மன் கோயில் பகுதியில் உள்ள தென்னந்தோப்பிற்கு சென்றிருந்தார். அப்போது கனமழை காரணமாக ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆற்றை கடக்க முயன்றபோது காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ராமச்சந்திரன் உயிரிழந்தார். ராஜபாளையத்தில் கனமழை காரணமாக தனியார் அரிசி ஆலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 100க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
குமரி: குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை கொட்டித் தீர்த்தது. மாம்பழத்துறையாறு அணையில் அதிகபட்சமாக 87 மி.மீ மழை பெய்திருந்தது. கடலோர பகுதிகளில் வசிக்கின்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை: நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையம், குறிச்சி மருதுபாண்டியர் 1வது தெருவில் வசிப்பவர் முத்தையா (55). நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக இவரது வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி முத்தையாவின் தாய் மாடத்தியம்மாள் (75) உயிரிழந்தார். கனமழை காரணமாக, நெல்லை டவுன் மற்றும் சந்திப்பு சிந்துபூந்துறை ஆகிய பகுதிகளிலும் சில வீடுகள் இடிந்து விழுந்தன.
தென்காசி மாவட்டத்தில் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டது. நெல்லை, தென்காசி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 12 செமீ மழையும், நாலுமுக்கு எஸ்டேட், தென்காசியில் தலா 10 செமீ மழையும் பெய்துள்ளது.
* முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு
152 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கப்படுகிறது. இந்த நிலையில், தேக்கடி, இடுக்கி உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக நீர்மட்டம் உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் காலையில் அணையின் நீர்மட்டம் 132.30 அடியாக இருந்தது. தொடர்ந்து இரவு, பகல் என அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை எதிரொலியாக நேற்று காலை 6 மணி நிலவரப்படி 137.80 அடியாக உயர்ந்தது.
மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,828 கன அடியாக வந்து கொண்டிருந்தது. நேற்று காலை 9 மணிக்கு அணையில் இருந்து முதற்கட்டமாக கேரள பகுதிக்கு மூன்று ஷட்டர்கள் வழியாக வினாடிக்கு 1,078 கன அடி திறந்து விடப்பட்டது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 6 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
* 33 ஆண்டுக்கு பின் பெரும் வெள்ளம்
உத்தமபாளையத்தில் உள்ள பெரியாற்று பாலம், களிமேட்டுபட்டி பகுதியில் 100 வீடுகளில் மழைநீர் புகுந்தது. 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. கடந்த 1992ல் இதேபோல முல்லைப்பெரியாற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அதன்பின்னர் 33 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது முல்லைப்பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
* தடுப்பணை உடைந்தது மின் உற்பத்தி நிறுத்தம்
கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுருளியாறு மின் நிலையம் செல்லும் வழியில் சிறு புனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையினால் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே மின் உற்பத்திக்காக கட்டப்பட்டிருந்த தடுப்பு அணை உடைந்து, மின் உற்பத்தி நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் நிலையத்தில் உள்ள இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பாதிப்படைந்தன. இதன் காரணமாக மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
* வைகை அணை இன்றிரவு முழு கொள்ளளவை எட்டும்?
தேனி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த கன மழையின் காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் நேற்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 2,268 கன அடியாக இருந்த நீர்வரத்து காலை 11 மணிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இதனால், நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 66 அடியாக இருந்தது. இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை (72 அடி) எட்ட வாய்ப்புள்ளதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* குன்னூரில் மழையால் பல இடங்களில் மண்சரிவு: மலை ரயில் பாதையில் மரம் முறிந்து விழுந்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை துவங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால் குன்னூர் அருகே உள்ள காந்திபுரம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
வண்டிச்சோலை, கிளண்டல், எடப்பள்ளி ஆகிய இடங்களில் சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்புத்துறையினர் அகற்றினர். குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. விடிய விடிய ஓயாமல் பெய்த மழையால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை, குன்னூர், கொலகம்பை ஆகிய சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டது. இதனிடையே குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் பாதையில் ஹில் குரோவ் பகுதியில் மரம் விழுந்தது.
உடனடியாக ரயில்வே ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால்நேற்று காலை 10.30க்கு குன்னூர் வரவேண்டிய மலை ரயில் மதியம் 12.20 மணிக்கு காலதாமதமாக வந்தடைந்தது. இதேபோல திருப்பூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து, உடுமலை திருமூர்த்தி மலை பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டது.