கேப்டவுன்: ஒருநாள் போட்டிகளில் இருந்து தென்னாப்பிரிக்க வீரர் குவிண்டன் டி காக் ஓய்வை அறிவித்திருந்த நிலையில், தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார். இதனால் வரும் நவம்பர் 4ம் தேதி தொடங்கவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ளார். 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு டி காக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் வழக்கமான கேப்டன் டெம்பா பவுமா தற்போது காயமடைந்துள்ளார், எனவே பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு வெவ்வேறு கேப்டன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
டெம்பா பவுமா இல்லாத நிலையில் டி காக்கின் வருகை தென்னாப்பிரிக்காவிற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும். குயின்டன் டி காக் கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடினார். டி காக் உலகக் கோப்பையில் 10 போட்டிகளில் 59.40 என்ற சராசரியுடன் 549 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்காவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் அக்டோபர் 12ஆம் தேதி தொடங்க உள்ளது. இரு அணிகளும் 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளன. குயின்டன் டி காக் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.