Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள தென்னாப்பிரிக்கா சென்றார் மோடி: ஜோகன்ஸ்பர்க்கில் உற்சாக வரவேற்பு

ஜோகன்ஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட உறுப்பு நாடுகளை கொண்ட ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தாண்டு தென்னாப்பிரிக்கா ஏற்றுள்ளது. இதனால் ஜி 20 அமைப்பின் 20வது உச்சி மாநாடு, ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள நாஸ்ரெக் மாநாட்டு மையத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 23ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி நேற்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச்சென்றார். இந்த மாநாட்டில், ‘அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி, பொருளாதாரங்களை கட்டியெழுப்புதல், வர்த்தகத்தின் பங்கு, வளர்ச்சிக்கான நிதி மற்றும் கடன் சுமை ஆகியவை உள்ளிட்ட சிறப்பு அமர்வுகள் நடைபெற உள்ளது. மாநாட்டின் மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி உரையாற்றி, இந்தியாவின் கருத்துக்களை முன்வைக்க உள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி, பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (இப்சா) தலைவர்கள் கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்கிறார். உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - காசா போர், உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் வர்த்தக போர் உள்ளிட்ட விவகாரங்களுக்கு மத்தியில் ஜி20 மாநாடு நடப்பதால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில்,” தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் நடக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வேன். இது ஆப்பிரிக்காவில் நடைபெறுவதால் இது ஒரு சிறப்பு உச்சி மாநாடு. பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் அங்கு விவாதிக்கப்படும். உச்சிமாநாட்டின்போது பல்வேறு உலகத்தலைவர்களைசந்திப்பேன். வசுதைவ குடும்பம், ஒரே பூமி, ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம் என்ற நமது தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப இந்தியாவின் பார்வையை உச்சிமாநாட்டின் முன்வைப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, நேற்று மாலை ஜோகன்ஸ்பர்க், வாட்டர்க்ளூப் விமான படை தளத்தில் வந்திறங்கிய மோடியை அந்த நாட்டின் கலைஞர்கள் பாரம்பரிய முறையில் நடனம் ஆடி வரவேற்றனர்.

* அமெரிக்காவிடம் பொறுப்பு ஒப்படைக்க மறுப்பு

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தென்னாப்பிரிக்கா வந்துள்ளனர். ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. அடுத்தாண்டு ஜி20 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதை குறிக்கும் விதமாக சிறு சுத்தியலை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அமெரிக்காவின் சார்பில் வெளியுறவு துறை அதிகாரி மார்க் டில்லார்டிடம் அதை ஒப்படைக்க முடியாது என்று தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா கூறினார். ஒரு நாட்டின் அதிபர் இன்னொரு நாட்டின் அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைக்கும் நிகழ்வு உலகில் இதுவரை நடந்திரா ஒன்று என அவர் கூறினார். தென்னாப்பிரிக்காவில் நடந்த வெள்ளை இன விவசாயிகள் படுகொலை தொடர்பாக இரு நாடுகளின் தலைவர்கள் இடையே கடும் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் டிரம்ப் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.