Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தென் ஆப்ரிக்காவில் ஜி20 மாநாடு நிறைவு ஏஐ தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய விதிகள்: இறுதி அமர்வில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் இறுதி அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உலகளாவிய விதிமுறைகள் வகுக்க வேண்டுமென வலியுறுத்தினார். வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு தென் ஆப்ரிக்காவின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது.

பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் பங்கேற்ற இம்மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, ‘முக்கிய கனிமங்கள், கண்ணியமான வேலைவாய்ப்பு, செயற்கை நுண்ணறிவில் அனைவருக்கும் நியாயமான எதிர்காலம்’ என்ற தலைப்பில் 3வது மற்றும் இறுதி அமர்வு நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:

முக்கியமான தொழில்நுட்பங்கள் நிதி நோக்கத்தோடு இல்லாமல் மனித நலனை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக, தொழில்நுட்பங்கள் தேசிய அளவில் இல்லாமல் உலகளாவியதாக இருக்க வேண்டும். அவை பிரத்யேக மாடல்களாக இல்லாமல் ஓபன் சோர்சை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். இந்த தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் தொழில்நுட்ப கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இது, விண்வெளி பயன்பாடுகள், ஏஐ மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்துதல்களில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தி உள்ளது. உலக நலனுக்காக செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதையும் அதன் தவறான பயன்பாடு தடுக்கப்படுவதையும் நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும். இதைச் செய்ய, பயனுள்ள மனித மேற்பார்வை, பாதுகாப்பு வடிவமைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் டீப் பேக்குகள்,

குற்றம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட சில முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் உலகளாவிய விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். மனித வாழ்க்கை, பாதுகாப்பு அல்லது பொது நம்பிக்கையை பாதிக்கும் ஏஐ அமைப்புகள் தணிக்கை செய்யக்கூடியவையாக இருக்க வேண்டும்.

மிக முக்கியமாக மனித திறன்களை மேம்படுத்துபவையாக மட்டுமே ஏஐ இருக்கு வேண்டுமே தவிர முடிவெடுப்பதற்கான இறுதி பொறுப்பு எப்போதும் மனிதர்களிடமே இருக்க வேண்டும். இந்த ஏஐ யுகத்தில், ‘இன்றைய வேலைகள்’ என்பதிலிருந்து ‘நாளைய திறன்கள்’ என்பதை நோக்கி நமது அணுகுமுறைகள் விரைவாக மாற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, பிரதமர் மோடி, தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோஸாவை சந்தித்து இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான உறவை ஆய்வு செய்த இரு தலைவர்களும், வர்த்தகம், கலாசாரம், முதலீடு , தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, முக்கியமான கனிமங்கள் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.

ஜி20 மாநாட்டை தலைமை ஏற்று வெற்றிகரமாக நடத்திய அதிபர் ரமபோஸாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இத்துடன் தென் ஆப்ரிக்கா தலைமையிலான ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு நிறைவடைந்தது. தென் ஆப்ரிக்கா உச்சி மாநாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் புறக்கணித்த நிலையில், அடுத்ததாக ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை அமெரிக்கா ஏற்பது குறிப்பிடத்தக்கது.

* ஐபிஎஸ்ஏ டிஜிட்டல் புதுமை கூட்டணி

ஜி20 மாநாட்டிற்கு இடையே நேற்று இந்தியா-பிரேசில்-தென்ஆப்ரிக்கா நாடுகள் இடையே ஒத்துழைப்பை பலப்படுத்தும் ஐபிஎஸ்ஏ தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் தென் ஆப்ரிக்கா அதிபர் ரமபோஸா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்த்திருத்தம் என்பது ஒரு விருப்பமல்ல, அது காலத்தின் கட்டாயம் என வலியுறுத்திய பிரதமர் மோடி, தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் 3 நாடுகளும் இணைந்து முன்னேற வேண்டும் என்றும், யுபிஐ போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, கோவின் போன்ற சுகாதார தளங்கள், சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் பெண்கள் தலைமையிலான தொழில்நுட்ப முயற்சிகளை 3 நாடுகளிடையே பகிர்ந்து கொள்ள ஐபிஎஸ்ஏ டிஜிட்டல் புதுமை கூட்டணியை நிறுவவும் முன்மொழிந்தார்.