தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மெகா தோல்வி!
கவுகாத்தி: இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்று 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.
இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், கவுகாத்தி மைதானத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்காவிடம் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இவ்வளவு பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்றது இதுவே முதல் முறையாகும்.
கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கவுகாத்தியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது.
தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 489 ரன்களை, இந்திய அணி இரண்டு இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்தும் (201 + 140 = 341 ரன்கள்) கூட எட்ட முடியவில்லை என்பது மிகப்பெரிய அவமானமாகும்.
முதல் இன்னிங்ஸில் 93 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய மார்கோ யான்சென் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் தொடர் நாயகன் விருதை பெற்றார்.
கடைசியாக 2000-ஆம் ஆண்டில் ஹான்சி குரோனியே தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி தான் இந்தியாவில் டெஸ்ட் தொடரை (2-0) வென்றிருந்தது. இப்போது டெம்பா பவுமா தலைமையில் அந்தச் சாதனை மீண்டும் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்திய அணி உள்ளூர் மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக (2024-இல் நியூசிலாந்திடம் 0-3, இப்போது தென்னாப்பிரிக்காவிடம் 0-2) டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
இந்தத் தோல்வி கௌதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் விளையாடும் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலிலும் இந்தியாவின் நிலை மேலும் சரிய வழிவகுத்துள்ளது.


