தென் ஆப்ரிக்காவுடன் 3வது ஓடிஐ தடுமாற்றத்தில் இருந்து தடம் மாறுமா இந்தியா?: ரோகித், கோஹ்லி மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு
விசாகப்பட்டினம்: இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது ஒரு நாள் போட்டி, விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தியா வந்துள்ள, டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வென்றது. அதைத் தொடர்ந்து, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 358 ரன் இமாலய இலக்கை தென் ஆப்ரிக்கா சாமர்த்தியமாக எட்டி வெற்றி வாகை சூடி தொடரை சமன் செய்தது.
அந்த அணியின் அய்டன் மார்க்ரம் அட்டகாசமாக ஆடி சதம் விளாசி தென் ஆப்ரிக்கா வெற்றி பெற உதவினார். தவிர, மேத்யூ பிரீட்ஸ்கி, டெவால்ட் புரூவிஸ் ஆகியோரும் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். கேப்டன் டெம்பா பவுமாவும் அணியின் வெற்றிக்கு உந்து சக்தியாக திகழ்கிறார். இந்திய அணியை பொறுத்தவரை, ஜாம்பவான் வீரர்களான விராட் கோஹ்லி, ரோகித் சர்மா ஆகியோரை நம்பியே உள்ளது.
கோஹ்லி 2 ஒரு நாள் போட்டிகளிலும் சதம் விளாசி தனது வல்லமையை மீண்டும் நிரூபித்துக் காட்டினார். அதே போல் ரோகித் சர்மாவும் முதல் ஒரு நாள் போட்டியில் ரன் குவித்து தான் எப்போதும் ஹிட் மேன்தான் என்பதை சாதித்து காட்டினார். இன்றைய போட்டியில் வெல்லும் அணி, தொடரை கைப்பற்றும் என்பதால், ரோகித், கோஹ்லி ஆகிய இருவரும் இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர்.
கடைசியாக, கோஹ்லி ஆடிய 3 இன்னிங்ஸ்களில் 2 சதம், ஒரு அரை சதம் விளாசியுள்ளார். ரோகித் சர்மா, தனது கடைசி 4 இன்னிங்ஸ்களில் ஒரு சதம், 2 அரை சதம் அடித்துள்ளார். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் சொதப்பி வருகிறார். தென் ஆப்ரிக்காவின் ஜெய்டன் சீல்ஸ் பந்தை எதிர்கொள்ள முடியாமல் அவர் தடுமாறி வருகிறார்.
தவிர, இந்திய அணியின் பந்து வீச்சு கவலைக்கு உரியதாக உள்ளது. பந்து வீச்சில் கோட்டை விட்டதால், 2வது ஒரு நாள் போட்டி எளிதில் கைவிட்டு போனது. இன்று நடக்கும் விசாகப்பட்டினம் மைதானம், பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இன்று நடக்கும் போட்டியில் இரு அணிகளும் தொடரை கைப்பற்றும் நோக்குடன் ஆக்ரோஷமாக மோதும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டி துவங்கும் நேரம்: பிற்பகல் 1.30 மணி
* இரு அணியில் ஆடும் வீரர்கள்
இந்தியா: கே.எல்.ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி, திலக் வர்மா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்சித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரெல்.
தென் ஆப்ரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), ஓட்நீல் பார்ட்மான், கோர்பின் பாஷ், மேத்யூ பிரீட்ஸ்கி, டெவால்ட் புரூவிஸ், நான்ட்ரே பர்கர், குவின்டன் டிகாக், டோனி டி ஜோர்ஸி, ரூபின் ஹெர்மான், கேஷவ் மகராஜ், மார்கோ யான்சன், அய்டன் மார்க்ரம், லுங்கி நிகிடி, ரையான் ரிக்கேல்டன், பிரிநீலன் சுப்ராயன்.

