புதுடெல்லி: இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இந்த தென் மேற்கு பருவமழை காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பொழிவு ஏற்படும். வழக்கமாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களுக்கு பரவும். இந்த ஆண்டு மே 13ம் தேதியிலேயே அந்தமான் தீவுகளில் மழை பெய்ய தொடங்கியது.
இந்த நிலையில், வரும் 15ம் தேதி தென் மேற்கு பருவமழை முடிவடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: செப்டம்பர் 15 ம் தேதி வாக்கில் மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை விலகுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. அக்டோபர் 15ம் தேதிக்குள் பருவ மழை ஓய்ந்துவிடும்.
இந்த ஆண்டு, பருவமழை வழக்கமான தேதியான ஜூலை 8 ஐ விட ஒன்பது நாட்கள் முன்னதாக நாடு முழுவதும் பெய்தது. 2020 ஆம் ஆண்டு ஜூன் 26 ம் தேதிக்குப் பிறகு, நாடு முழுவதும் தொடங்கிய முதல் பருவமழை இதுவாகும்.பருவமழை காலத்தில் இதுவரை 836.2 மிமீ மழை பெய்துள்ளது. இது 7 சதவீதம் அதிகம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.