சொந்த ஊருக்கு சென்ற போது நேர்ந்த சோகம்.. தென்ஆப்பிரிக்காவில் மலையில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு!!
ஜோகன்னஸ்பர்க்: தென்ஆப்பிரிக்கா மலையில் விபத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த 42 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்ஆப்பிரிக்காவின் தெற்கே ஈஸ்டர்ன் கேப் பகுதியில் இருந்து வடக்கே பிரிட்டோரியா தலைநகரில் இருந்து 400 கி.மீட்டர் தொலைவில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகரருகே என்1 நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் உருண்டது. மலையடிவார பகுதியில் விழுந்தது.
இந்த சம்பவத்தில், தலைகுப்புற பஸ் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் உள்ளிட்ட 42 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஜிம்பாப்வே மற்றும் மாளவி நாடுகளை சேர்ந்த பலர் உள்ளனர். சொந்த ஊருக்கு அவர்கள் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவசரகால குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.