Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சவுமியா தோல்விக்கு ஜி.கே.மணி காரணம்: பாமக மாஜி எம்எல்ஏ குற்றச்சாட்டு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் பாமக நிர்வாகி எழுதிய நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. புத்தகத்தை பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி வெளியிட்டு பேசினார். முன்னதாக முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், கட்சிக்காக யார், யாரெல்லாம் உழைத்தார்களோ, யாரெல்லாம் தியாகம் செய்தார்களோ, அவர்களை எல்லாம் ஜி.கே.மணி அடையாளம் தெரியாமல் ஒழித்து விட்டார். இன்று நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் சவுமியா அன்புமணி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டபோது, பெரிய எழுச்சியை பார்க்க முடிந்தது. ஆனால், ஜி.கே.மணி தலைமையிலே ஒரு சதிக்கூட்டம், திட்டமிட்டு சவுமியா அன்புமணியை தோற்கடிப்பதற்கான வேலையை செய்தது.

பாமகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏக்கள் வெளியே சென்றதற்கு ஜி.கே.மணி தான் காரணம். 30 ஆண்டு காலமாக இந்த கட்சிக்கு அவர் செய்தது அத்தனையும் துரோகம் மட்டுமே. ஜி.கே.மணி என்ன ஆற்காடு நவாப் பேரனா?, பல ஆயிரக்கணக்கான கோடி வைத்திருந்தாரா? சாதாரண சைக்கிளில் 300 ரூபாய் சம்பளத்துக்கு ஆசிரியர் வேலைக்கு போனவர், இன்று பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அவருக்கு எப்படி வந்தது?. இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஜி.கே.மணி கலந்து கொண்டது உண்டா?. அன்புமணி குடும்பத்தை சேர்ந்தவர்கள், இந்த மாவட்டத்தில் இருக்க கூடாது என்று ஜி.கே.மணி சதி செய்து, ராமதாஸ் வாயாலேயே எங்களை பற்றி அசிங்கமாக பேச வைத்து விட்டார். ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை, தடம் புரளாமல் ராமதாசை கடவுளாக ஏற்றுக் கொண்டு, இன்று கட்சியை வழிநடத்த தகுதியுள்ள நபர் அன்புமணி தான் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு வேலுசாமி பேசினார்.