2ம் இன்னிங்சிலும் தெ.ஆ சொதப்பல் வெற்றி சிம்மாசனத்தில் அமருமா இந்தியா? ஜடேஜா ஜாலத்தால் வீழ்ந்த 4 விக்கெட்டுகள்
கொல்கத்தா: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, 7 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் உள்ளது. இந்தியா வந்துள்ள, டெம்பா பவுமா தலைமையிலான கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கொல்கத்தாவில் துவங்கியது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 159 ரன்கள் எடுத்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா, முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில் 2ம் நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியும் சொதப்பலாக ஆடி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39, வாஷிங்டன் சுந்தர் 29 ரன் எடுத்தனர். 62.2 ஓவரில் இந்தியா 189 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
பின் 2ம் இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்கா இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பரிதாபமாக விக்கெட்டுகளை இழந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 93 ரன் எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட் எடுத்தார். இரு அணிகளும் மோசமாக ஆடியதால் நேற்று மட்டும் 15 விக்கெட்டுகள் விழுந்தன. இன்னும் 3 நாட்கள் முழுமையாக உள்ள நிலையில் தென் ஆப்ரிக்கா 63 ரன் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதால் தோல்வியின் விளிம்பில் உள்ளது. இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.


