சோரி சோரி, சுப்கே சுப்கே.. வாக்குத் திருட்டு குறித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்ட ராகுல் காந்தி..!!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக, குற்றம்சாட்டியுள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லாபடா லேடீஸ் (காணாமல் போன பெண்கள்) என்ற இந்தி படத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் காட்சியை, தேர்தல் ஆணையத்தின் மீதான புகாருக்கு ஏற்றவாறு மாற்றி வெளியிட்டுள்ளார். லாபடா லேடீஸ் படத்தில், மனைவியைக் காணவில்லை என்று கணவர் புகார் கொடுக்க வருவார். ஒரு நிமிடம் ஓடும் அந்த விடியோவை, சோரி சோரி, சுப்கே சுப்கே என்ற இந்தி பாடலின் வரிகளுடன் இப்போது இல்லையென்றால், எப்போதும் இல்லை, மக்கள் விழித்துக் கொண்டுவிட்டனர் என்று பதிவிட்டு ஷேர் செய்திருக்கிறார்.
அந்த வீடியோவில், ஒருவர் காவல்நிலையம் வந்து, திருட்டுப் புகார் கொடுக்க வந்திருப்பதாகக் கூறுகிறார். அதைக் கேட்ட போலீஸ், வழக்கமாக மக்கள் திருட்டுப் புகார் கொடுக்கும் பொருள்களின் பெயர்களை பட்டியலிடுகிறார். ஆனால், அதெல்லாம் இல்லை, எனது வாக்குத் திருட்டுப் போனதாக அவர் கூறுகிறார். மேலும், வாக்குத் திருட்டிலிருந்து சுதந்திரம் என்ற பிரசாரத்தில் பங்கேற்று, பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ராகுலின் குற்றச்சாட்டுக்கு ஆதரவு அளிக்குமாறும் காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது. மேலும், பிகார் மாநிலத்திலிருந்து 17ம் தேதி வாக்காளர்களின் அதிகார பயணத்தை ராகுல் காந்தி தொடங்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.