சென்னை: தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படத்தில், தனது ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு’ ஆகிய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. படத்திலிருந்து பாடலை நீக்கியும், பாடலுக்கு தடை விதித்தும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது டியூட் பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடமிருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்தது. சோனி நிறுவனத்திடம் இருந்து இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளோம் என்று குறிப்பிட்டார். அதற்கு, இளையராஜா தரப்பில் ஏற்கனவே எக்கோ நிறுவனம் பயன்படுத்த இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அனுமதியில்லாமல் இளையராஜாவின் பாடல்களை டியூட் படத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அப்போது, டியூட் பட தயாரிப்பு நிறுவனம் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

