முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை பாராட்டி பாடல்; இனிப்பான கேசரி, அருமையான வெண்பொங்கல்: ஸ்ரீவைகுண்டம் மாணவிகள் நெகிழ்ச்சி
நெல்லை: ‘இனிப்பான சேகரி, அருமையான வெண் பொங்கல்’ என முதல்வர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டத்தை ஸ்ரீவைகுண்டம் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் பாடல் பாடி முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். முதன் முதலாக இந்த திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு 1.3.2023 முதலும், 3ம் கட்டமாக 25.8.2023 முதல் ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளுக்கும், 4ம் கட்டமாக ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 15.7.2027 முதலும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் 5ம் கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை சென்னை மயிலாப்பூரில் நடந்த விழாவில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கினார். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மேயர், துணை மேயர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், குமரகுருபர சுவாமிகள் தொடக்கப் பள்ளியில் இன்று காலை உணவு திட்டத்தின் தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் பள்ளி மாணவிகள் முதல்வரை பாராட்டி பாடல் பாடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இனிப்பான கேசரியும், அருமையான வெண் பொங்கலும் முதல்வர் ஸ்டாலினின் நல்ல காலை உணவை சுவைத்து சாப்பிட ஓடி வாருங்க, ரவை உப்புமா, சேமியா கிச்சடி, அரிசி உப்புமா தாங்க, இவை அத்தனையும் சத்தான உணவு, இன்பமா ருசிக்க வாங்க’’ என சிறு குழந்தைகள் பாடிய பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.