Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாதக் கொலுசு பாட்டு பாடி வரும்!

ஆயிரங்களில் செலவிட்டு முகம், கூந்தல், ஏன் கைகளைக் கூட பராமரிக்கிறோம். ஆனால் இந்தக் கால்களை பலரும் கண்டுகொள்வதில்லை. நம்மை நாள் முழுக்க தாங்கி நிற்கும் பாதங்களையும், கால்களையும் கூட சரிவர பராமரித்தால் காலணிகள், கொலுசு, ஏன் சில உடைகளே கூட இன்னும் அழகாக நம்மைக் காட்டும். இதோ சில கால்கள் பராமரிப்பு டிப்ஸ்.

கருமையான கால்களுக்கு!

முதலில் 2 வெள்ளரிக்காயை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அடுத்து வெள்ளரிக்காயை வட்ட வடிவில் கட் செய்து கொள்ளவும். தனியாக ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காயுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். பிறகு இதனை ஃபிரிட்ஜில் 10 நிமிடம் வைக்க வேண்டும். 10 நிமிடம் ஆன பிறகு ஃபிரிட்ஜில் இருந்து வெள்ளரிக்காயை எடுத்து அந்தத் தண்ணீரைக் காலில் ஊற்ற வேண்டும். அதன் பிறகு காலை சுற்றிலும் 5 அல்லது 10 நிமிடம் வரை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்த வெள்ளரிக்காயை நன்றாக தேய்க்கவும். கருமையாக இருக்கும் கால்கள் பளிச்சென மின்னும்.

வறண்ட கால்களுக்கு!

ஒரு கப்பில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் 1 ஸ்பூன், சிறிது தயிர் சேர்த்து நன்கு கலந்து கால்களில் பூசி 15 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவ கால்கள் வறட்சி குறைந்து ஈரப்பதமாக காட்சி கொடுக்கும்.

வெடிப்புகள் நீங்க!

மிதமான நீரில் சிறிது உப்பு கலந்து அதனுடன் மஞ்சள் சேர்த்து கால்களை 20 முதல் 30 நிமிடங்கள் அந்த நீரில் வைத்திருந்து எடுக்க, வெடிப்புகள், அலர்ஜிகள், போன்றவை சரியாகும்.

வீட்டிலேயே பெடிக்யூர்!

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ரோஸ் உப்பு அல்லது இந்து உப்பை மிதமான நீரில் கலந்து கால்களை சிறிது நேரம் அதில் வைத்து எடுக்க சருமத் துளைகள் திறந்துகொண்டு அழுக்குகள் இறங்கிவிடும். பின்னர் சர்க்கரை மற்றும் தேனுடன் கலந்து கால்களில் நன்கு தேய்க்க இயற்கையான ஸ்க்ரப்பராக மாறி இறந்த செல்களை அகற்றும். பின்னர் ஏதேனும் ஒரு மசாஜ் கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்து துடைத்துக் கொள்ளவும். பின்னர் பாடி வாஷ் ஜெல்கொண்டு நன்கு கால்களைக் கழுவலாம்.

- பா. கவிதா