டெல்லி: லடாக் காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கின் கைதுக்கு எதிராக அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக், தற்போது சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால், ஜம்மு - காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சி வழங்கும் 6வது அட்டவணை அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது லடாக்கில் வன்முறை வெடித்தது. அப்போது போராட்டக்காரர்கள் பாஜக அலுவலகத்துக்கு தீ வைத்ததுடன், வாகனங்களையும் கொளுத்தினர். இதனால் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றார். ஆயினும் இப்போராட்டத்தின்போது 4 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சோனம் வாங்சுக் ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் லடாக் காவல் துறையினரும் மத்திய உளவுத் துறையினரும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் தனது கணவர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கீதாஞ்சலி ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரை உடனடியாக விடுவிக்கக் கோரியும், அவரது தடுப்புக்காவல் "சட்டவிரோதமானது" என்றும் அவர் கூறுகிறார். செப்டம்பர் 26 அன்று வாங்சுக் கைது செய்யப்பட்டதிலிருந்து தன்னால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஆங்மோ தனது ஆட்கொணர்வு மனுவில் தெரிவித்துள்ளார். தடுப்புக்காவல் உத்தரவின் நகல் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும், இது நடைமுறை மீறல் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.