புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) பணியாற்றியவர் முகமது முஸ்தபா. இவரது மனைவி ரசியா சுல்தானா, பஞ்சாபில் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். இவர்களது மகன் அகில் அக்தர் (35). தனது தந்தைக்கும், தனது மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து விட்டதாகவும், இதனால் தனது தாய், தந்தை, சகோதரி உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமும் தன்னை கொலை செய்ய அல்லது பொய் வழக்கில் சிக்க வைக்க சதி செய்வதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் உள்ள தனது வீட்டில் அகில் அக்தர், கடந்த அக்டோபர் 16ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கை முதலில் பஞ்ச்குலா காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், பின்னர் அரியானா அரசு இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் (சி.பி.ஐ.) ஒப்படைத்தது. இதுகுறித்து சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி. முகமது முஸ்தபா முகமது முஸ்தபா, அவரது மனைவி ரசியா சுல்தானா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

