சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் விரக்தி அடைந்த தொழிலாளி, மகன், மகளை கொன்றுவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி(38). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. மகள் கயல்விழி(8), மகன் நிதர்சன்(7). இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பூங்கொடி கணவரையும், மகன், மகளையும் பிரிந்து தனது தாய் வீடான ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்திற்கு சென்று விட்டார். அப்போது, கணவரிடம் இருந்து நகை மற்றும் கணவர் பெயரில் தெள்ளூரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை, தனது பெயரில் எழுதி வாங்கிக்கொண்டு சென்றுவிட்டாராம்.
இதனால் கிருஷ்ணன், சென்னை குரோம்பேட்டைக்கு மகன், மகளுடன் சென்று அங்கேயே தங்கி கூலிவேலை செய்து வந்தார். அங்குள்ள பள்ளியில் இருவரும் படித்து வந்தனர். திருவிழா, பண்டிகை காலங்களில் தனது சொந்த ஊருக்கு வந்து தங்கி, உறவினர்களை பார்த்துவிட்டு செல்வாராம்.இந்நிலையில் கிருஷ்ணன், தீபாவளி கொண்டாடுவதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன், மகன், மகளுடன் சொந்த ஊருக்கு வந்தார். இங்குள்ள வீட்டில் தங்கியிருந்த அவர், உறவினர்களின் வீட்டிற்கு மகன், மகளுடன் சென்று உணவு சாப்பிட்டு வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று இரவும் உணவு சாப்பிட்டு விட்டு குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கினார். இந்நிலையில் நகை, நிலத்தை பறித்துக்கொண்டு, மனைவி விட்டுவிட்டு சென்றதால் குழந்தைகளுடன் மனவேதனையில் இருந்த கிருஷ்ணன், குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
அதன்படி நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த மகன், மகளின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்றுள்ளார். பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்ககாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை திறந்து பார்த்தனர். அப்போது 3 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது கிருஷ்ணன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், எனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் உள்ளது. எனது மனைவி அவரது பெற்றோருடன் சேர்ந்து, நிலத்தை ஏமாற்றி வாங்கிக்கொண்டார். எனவே, குழந்தைகளுடன் வேதனையுடன் வாழ விருப்பமில்லை என எழுதி வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
  
  
  
   
