* சிறப்பு வகுப்பில் தூங்கியதால் ஆத்திரம்
* சக மாணவர்கள், பெற்றோர்கள் மறியல்
நாமகிரிப்பேட்டை : நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி அருகே, தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் நேற்று முன்தினம் (ஞாயிறு) பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி மகன் ஜீவன் (16), பிளஸ் 1 கணினி பாடப்பிரிவில் பயின்று வருகிறார்.
சிறப்பு வகுப்பின் போது சோர்வாக இருந்ததால், வகுப்பறையில் அமர்ந்து கொண்டிருந்த ஜீவன் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பள்ளி தாளாளரின் மகன் நவீன் என்பவர், மாணவரை அழைத்து மிரட்டி, காலால் உதைத்து கீழே தள்ளி, சக மாணவர்களின் கண்ணெதிரே சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஜீவன், தனது பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக மாணவரை முள்ளுக்குறிச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மாணவனின் பெற்றோர் மற்றும் சக மாணவர்களுடன், தாளாளர் மகனிடம் கேட்டுள்ளனர். அதற்கு முறையாக பள்ளி நிர்வாகம் பதில் அளிக்காததால், சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவரை தாக்கிய பள்ளி தாளாளர் மகன் நவீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட தொடங்கினர்.
அவர்களை சமாதானப்படுத்திய டிஎஸ்பி கேட்டுக் கொண்டதின் பேரில், பள்ளி தாளாளர், மாவட்ட தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலர் ஜோதி ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை துவங்கியது.
அப்போது பெற்றோர்கள் கூறுகையில், ‘இதுபோன்ற தாக்குதல் சம்பவம் 5 முறைக்கு மேல் நடந்துள்ளது. மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் பயந்து கொண்டு பெற்றோர்களிடம் மறைத்து விட்டனர். இனிமேல் இந்த நிலை நீடிக்க கூடாது.
மாணவர்களை துன்புறுத்தாமல், அன்போடு அரவணைத்து கல்வி கற்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பள்ளி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, இதுபோல் இந்த சம்பவம் நடைபெற்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறையில் பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி கூறினர். இதனையடுத்து சமாதானம் அடைந்த பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
