ராஞ்சி: உத்தரபிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன் யானையை யாரோ திருடி விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்தவர் நரேந்திர குமார் சுக்லா ஒரு யானையை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம் ஜார்க்கட் பகுதியில் இருந்து யானையும், அதன் பாகனையும் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் யானைக்கான உரிமை எண்ணையும் தந்துள்ளார்.
இதுகுறித்து மேதினிநகர் பிரதேச வன அதிகாரி சத்யம் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “பலமுவில் தீவன பற்றாக்குறை ஏற்பட்டதால், நரேந்திர குமார் சுக்லா யானையை ராஞ்சிக்கு அழைத்து வந்தார். அங்கிருந்து மிர்சாபூருக்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தார். பலமுவில் பாகனிடம் யானையை ஒப்படைத்துள்ளார். பின்னர் யானையும், பாகனும் காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்” என்றார். இதுகுறித்த மேலும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.