யாரோ எழுதி கொடுப்பதை அப்படியே பார்த்து படிக்க இது சினிமா இல்ல... அரசியல்: பொய்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
திருச்சி: யாரோ எழுதி கொடுப்பதை அப்படியே பார்த்து படிக்க இது சினிமா ஸ்கிரிப்ட் இல்ல... இது அரசியல்... பிரசார கூட்டத்தில் பொய்களையும், அவதூறுகளையு பரப்பிய விஜய்க்கு ஆதாரத்துடன் பதிலை பதிவிட்டு விஜய்யை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தோறும் பிரசாரத்தை கடந்த 13ம் தேதி திருச்சியில் தொடங்கினார். தொடர்ந்து, அரியலூரில் பேசிய அவர், பெரம்பலூரில் பேசாமல் கையசைத்து விட்டு கிளம்பிவிட்டார்.
2வது சனிக்கிழமையான நேற்று முன்தினம் நாகை, திருவாரூரில் பிரசாரம் செய்தார். படப்பிடிப்பில் ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்து பேசுவதுபோல், யாரோ எழுதிக்கொடுத்ததை ஒரு பேப்பரை பார்த்து அதில் இருப்பதை அப்படியே சினிமா டயலாக் பேசுவதுபோல் ஒப்புவித்து சென்று உள்ளார். மேற்கண்ட இடங்களில் பிரசாரம் செய்தபோது, அரசு மீது பல்வேறு அவதூறுகளை, பொய்களையும் பேசிவிட்டு சென்று உள்ளார். இதற்கு ஆதாரங்களை வெளியிட்டு, ஒரு தலைவர் உண்மை தன்மையை பார்க்காமல் பேசுவதா? முழுமையான அரசியல் தெரியாமல் உளறுவதா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும், அரசியல் விமர்சகர்களும் வறுத்தெடுத்து வருகின்றனர்.
* நாகப்பட்டினத்தில் விஜய் பேசும்போது, நாகப்பட்டினத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீர் கொண்டு வருவோம் என்று சொன்னார்களே.. கொண்டு வந்தார்களா?... எனக்கேள்வி எழுப்பினார். ஆனால் உண்மை என்னவென்றால் கடலோர மாவட்டமான நாகப்பட்டினத்தில் ஏற்கனவே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. நாகப்பட்டினம் நகராட்சியின் தரவுகளின் படி நாகப்பட்டினம் நகருக்கு கொள்ளிடத்தில் இருந்து தினமும் 6 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
* மீனவர்கள் அதிகம் இருக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடல் சார் கல்லூரி ஏன் கொண்டுவரவில்லை என விஜய் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்வியை கேட்ட விஜய், ஒரு உண்மையை மறந்து விட்டார். அதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பல்கலை கழகத்தில் மீன்வள அறிவியல் கல்வி, மீன்வள ஆராய்ச்சி மற்றும் மீன் உற்பத்தி மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு வகையான இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
* அலையாத்தி காடுகளை காப்பாற்ற அரசு தவறிவிட்டதாகவும், மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் உண்மை என்னவென்றால் அரசின் முயற்சியாலும், தீவிர நடவடிக்கைகளாலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது அலையாத்தி காடுகளின் பரப்பு இரு மடங்காகியுள்ளது. தமிழக அரசு வழங்கும் புள்ளி விபரங்களின் படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2021ம் ஆண்டு 45 சதுர கிலோ மீட்டராக இருந்த மாங்குரோவ் காடுகளின் பரப்பு தற்போது 90 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 586 ஹெக்டேரில் மாங்குரோவ் காடுகள் பரவியுள்ளன. மேலும், இந்த மாங்குரோவ் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
* தஞ்சாவூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணி மந்தமாக நடப்பதாக தெரிவித்தார். ஆனால் தேசிய நெடுஞ்சாலை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலை சரியில்லை என்றால் ஒன்றிய அரசை தான் குற்றம் சாட்ட வேண்டும். ஆனால் விஜய், மாநில அரசை தான் குற்றம் சாட்டியிருக்கிறார்.
* மற்ற மாநில மீனவர்கள் இந்திய மீனவர்கள், தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய மீனவர்கள் இல்லையா என கேள்வி எழுப்பிய விஜய், மீனவர்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வில்லை என குற்றம் சாட்டினார். மீனவர்கள் பிரச்னை இருநாட்டு விவகாரம். ஒன்றிய அரசுதான் பேசி தீர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போது தமிழ்நாடு முதல்வர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆனால், இதுவரை மீனவர்கள் கைதை கண்டித்து ஒன்றிய அரசுக்கு விஜய் கடிதம் எழுதியதே இல்லை.
* பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரும் போது கட்டுப்பாடுகள் விதிப்பீர்களா என்று விஜய் கேள்வி எழுப்பினார். கடந்தாண்டு ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்த போது, காவல்துறை சார்பில் 20 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
* நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லை என்று விஜய் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதிலில், தவெக தலைவர் விஜய்யின் பேச்சு, யாரோ எழுதிக்கொடுத்து படிப்பதுபோல் உள்ளது. நாகப்பட்டினம் மருத்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள். நாகப்பட்டினம் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு இல்லை. நாகூர் மருத்துவமனையில், மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைத்தபிறகு 500 படுக்கை வசதியுடன் பிரசவத்துக்கு பிரம்மாண்டமாக மகப்பேறு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள். அல்லது விஜய் கட்சியினரை அங்கு சென்று பார்க்க சொல்லுங்கள்’ என்று கூறி உள்ளார்.
* நாகப்பட்டினத்தில் ஏற்கனவே இருந்த ஸ்டீல் ரோலிங் மில்லையும், ரயில் பெட்டி தயாரிக்கிற தொழிற்சாலையையும் மூடிட்டாங்க. அதை மறுபடியும் திறந்தா நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் ஏன் அதை பத்தி யோசிக்க மாட்டேங்கறீங்க? என கேள்வி எழுப்பினார். ஆனால் தமிழ்நாட்டில் ரயில்பெட்டி தொழிற்சாலை சென்னையில் ஐசிஎப்பில் மட்டும் தான் உள்ளது. 1861ம் ஆண்டு நாகை ரயில் நிலையம் தொடங்கப்பட்டது. அதன்பினர் ரயில் என்ஜின் பராமரிக்கும் தொழிற்சாலை அங்கு செயல்பட்டு வந்தது. பின்னர், நிர்வாக பிரச்னை காரணமாக 1929ம் ஆண்டு திருச்சி பொன்மலையில் ரயில் என்ஜின் பராமரிக்கும் தொழிற்சாலை மாற்றப்பட்டது. தொழிற்சாலை மாற்றி கிட்டதிட்ட 96 ஆண்டுகள் ஆகுகிறது. இந்த ரயில் துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை கூட தெரியாமல் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என விஜய் பேசி உள்ளார்.
கடந்த 13ம்தேதி திருச்சி மரக்கடை பகுதி மற்றும் அரியலூரில் விஜய் பேசும்போது தனது முதல் பிரசாரத்தில், திருச்சியில் 2 அமைச்சர்கள் இருந்தும் திருச்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அதற்கு புள்ளி விபரத்துடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்திருந்தார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் துறையில் கிட்டத்தட்ட ரூ.128 கோடி மதிப்பில் 38 ஏக்கரில் பேரறிஞர் அண்ணா பெயரில் கனரக வாகனம் சரக்கு முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் பெயரில் ரூ.236 கோடி மதிப்பில் 22 ஏக்கரில் காய்கறி அங்காடி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கலைஞர் பெயரில் ரூ.408 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சப்பூர் அருகே ரூ.400 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மணப்பாறையில் 110 ஏக்கரில் சிப்காட் தொழில் நிறுவனம் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது.
ரூ.7 கோடி மதிப்பில் வாரச்சந்தையும், மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் கொண்டுவரப்பட்டுள்ளது. திருவெறும்பூரில் ரூ.56 கோடி மதிப்பில் அரசு மாதிரி பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. ரூ.150 கோடி மதிப்பில் சர்வதேச ஒலிம்பிக் அகாடமி தொடங்க முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.3கோடி மதிப்பில் ஜல்லிக்கட்டு அரங்கமும், திருச்சி கிழக்கு தொகுதியில் காமராஜர் பெயரில் ரூ.290 கோடி மதிப்பில் பெரிய நூலகம், அறிவுசார் மையமும் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.18 கோடி மதிப்பில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெண்களுக்கு அரசு வேலையில் 40%, தமிழ் தெரிந்தால் மட்டுமே அரசு பணி என்று முதல்வர் சட்டம் கொண்டு வந்ததும், 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும் தெரியாமல் உளறிவிட்டு சென்றுள்ளார்.
ஒரு அரசியல் கட்சி தலைவர் மக்களுக்கான திட்டங்கள் குறித்து பேசாமல், ஒரு கட்சியை குறிவைத்து மட்டும் சினிமா ஸ்கிரிப்ட் போல் எழுதி கொடுப்பதை உண்மை தன்மையை ஆராயாமல் பஞ்ச் டயலாக் பேசுவதுபோல் விஜய் பேசிவிட்டு சென்று உள்ளார். கூட்டம் கூடுகிறது என்பதற்காக மக்கள் மத்தியில் அரசு மீது அவதூறுகளை பரப்பும் நோக்கில் எழுதி கொடுப்பதை அப்படியே படித்துவிட்டு செல்கிறார். இது சினிமா ஸ்கிரிப்ட் அல்ல. இது அரசியல். அதை கொஞ்சம் விஜய்க்கு ஞாபகப்படுத்துங்கள் என்று அரசியல் விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
* கரெண்ட்டை கட் பண்ண சொன்னதே தவெகதான்..
விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் ஆபத்தை உணராமல் மரங்கள், மின்கம்பங்கள் மீது ஏறுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அரசுதான் பதில் சொல்ல வேண்டும். இந்த கேள்வியை சென்னை உயர் நீதிமன்றமும் எழுப்பி உள்ளது. வெளியூர்களில் பல இடங்களில் உயரழுத்த மின்கம்பங்கள் செல்கிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்பட்டது. மேலும், விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கேட்கும்போதே முன்னெச்சரிக்கையாக மின்தடை செய்ய வேண்டும் என அக்கட்சியினரே மனு அளிக்கின்றனர்.
நேற்றுமுன்தினம் நாகப்பட்டினம் பிரசாரத்திற்கு கூட தவெக மாவட்ட செயலாளர் சுகுமார், நாகை அண்ணா சிலை அருகே விஜய் பிரசாரம் செய்ய உள்ளார். இவ்வழித்தடத்தில் உள்ள உயர் மின்னழுத்த கம்பி உள்ளதால் விஜய்யின் பிரசாரம் தொடங்கி முடியும் வரை அவ்வழியில் உள்ள வழித்தடங்களில் மின் நிறுத்தம் செய்ய வேண்டும் என மின்வாரியத்தில் கோரியிருந்தார். இதை கூட தெரியாமல் மின்தடை செய்வதாக விஜய் பேசி உள்ளார். இவரது பேச்சை பார்க்கும் போது ரசிகர்கள் உயிரை அவர் பெரிசாக மதிக்கவில்லை என்று அவரது கட்சியினரே குற்றம்சாட்டுகின்றனர்.
* திருவாரூரில் அரசு திட்டங்கள் போஸ்டர் ஒட்டி திமுக பதிலடி
திருவாரூரில் பேசிய விஜய், தமிழக அரசு திருவாரூர் மாவட்டத்திற்கு எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். திருவாரூர் மாவட்டத்தில் திமுக அரசில் கடந்த நான்காண்டுகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து விளக்கமான புள்ளி விபரங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
* திருவாரூர் மாவட்டத்தில் 241 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கலைஞர் வேளாண் வளர்ச்சித்திட்டத்தின கீழ், 83,721 விவசாயிகளுக்கு கருவிகள், நுண்ணீர் பாசனம், ஆழ்துளை கிணறுகள் போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் ரூ.407.15 கோடி மதிப்பில் 793 கிலோ மீட்டர் நீள ஊரக சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரூ.109.25 கோடியில் 33 கனரக பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
* 51 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 2,426 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 52,529 மகளிருக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 2,976 கோடி கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. 57,529 பேருக்கு தலா ரூ.1,200 முதியோர் ஓய்வூதியமும், 5,627 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
* 48,133 பேருக்கு ரூ.52.6 கோடி மதிப்பில் மருத்துவ காப்பிட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு திருவாரூர் மாவட்டத்தில் நான்காண்டுகளில் திமுக அரசு செயல்படுத்தியுள்ள மக்கள் நலத்திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் திமுக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்த விபரங்களும் வௌியிடப்பட்டுள்ளன.