Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பொதுத்தேர்வுக்குத் திட்டமிட சில ஆலோசனைகள்

இந்தக் கல்வி ஆண்டுக்கான அரசு பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இன்னும் மூன்றரை மாதங்கள் மட்டுமே உள்ளன. டிசம்பர் இறுதியில் பாடங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டுவிடும். ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களிலும் திருப்புதல் தேர்வு நடைபெறும். ஒரு விவசாயிக்கு எப்படி அறுவடைக் காலம் முக்கியமானதோ அதைப்போலவே ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தேர்வுக் காலம் மிகவும் இன்றி அமையாததாகும். ஓராண்டு உழைப்பு எதிர்வரும் தேர்வில் தான் வெளிப்படும். நாம் என்னதான் ஆண்டு முழுவதும் உழைத்தாலும் இந்தத் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள திட்டமிடுவது ஒரு தனிக் கலை. அதே சமயம் தேர்வைக் கண்டு பதற்றப்படத் தேவையில்லை. இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் திட்டமிட்டு பொதுத் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள நிச்சயம் கைகொடுக்கும்.

உடல்நலத்தில் கவனம்: சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய இயலும். எனவே, நம் உடல் நலத்தைப் பேணிக்காத்தால்தான் தேர்வைச் சிறப்பாக எதிர்கொள்ள முடியும். ஆகவே, இந்த பருவ கால மாற்றங்களுக்கு ஏற்ப நம் பழக்க வழக்கங்கள், உணவுமுறை, உடை போன்றவற்றையும் அமைத்துக்கொள்ள வேண்டும். எளிதில் கிடைக்கக்கூடிய அனைத்துச் சத்துகளும் நிரம்பிய உணவைக் கட்டாயம் உண்ண வேண்டும். முருங்கைக்கீரை, முட்டை ஆகியவற்றை நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் பரவும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படா வண்ணம் குடிநீரில் கவனம் செலுத்த வேண்டும். காய்ச்சி வடிகட்டிய நீரைக் குடிப்பது சிறந்தது.

கொஞ்சம் விளையாடலாம்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் தேர்வு நெருங்கிவிட்டதே… இப்போது விளையாடலாமா? பெரும்பாலான ஆசிரியர்களும் பெற்றோர்களும் தேர்வுநேரத்தில் விளையாடக்கூடாது என்று கண்டிப்பாக கூறி விடுகின்றனர். ஆனால், விளையாட்டு உடற் பயிற்சி போன்றவை தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பதனால் ஏற்படும் மனச்சோர்வை மாற்றி புத்துணர்வைத் தரும். எனவே, மாலை நேரத்தில் ஒரு அரைமணி நேரம் விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

வேண்டாம் கைப்பேசி: தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கைப்பேசிக்கு அடிமையாகிவிட்டனர். அதிலும் மாணவர்களிடம் கைப்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளது. தேர்வு நேரத்திலாவது உறுதியாக மாணவர்களுக்கு கைப்பேசியைக் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் கைப்பேசி பயன்படுத்தாமல் இருப்பதைக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். மாணவர்களும் கைப்பேசி விஷயத்தில் தங்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கால அட்டவணை: பொதுத்தேர்வுக்காக அரசு வெளியிட்டுள்ள கால அட்டவணையைக் கண்முன் படும்படி ஒட்டி வைத்துக் கொள்வதோடு இரண்டு மாதங்களுக்கான திட்டமிடல்களை அவரவர்கள் உருவாக்கிக்கொண்டு உங்களுக்கென ஒரு காலஅட்டவணையை தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது. அதிகாலை நேரத்தில் எழுந்து படிக்கின்ற பழக்கத்தைத் தேர்வுக் காலத்தில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை படிப்பது என்கிற உறுதியைப் பொதுத்தேர்வு எழுதுபவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதுபோல் இரவு மூன்று மணி நேரம் உங்கள் சூழலுக்கு ஏற்ப படிக்க வேண்டும். அதற்காக நள்ளிரவு வரை கண்விழித்து படிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மற்ற நாட்களில் எட்டு மணி நேரம் தூங்கினாலும் தேர்வு நேரத்தில் 6 மணி நேர தூக்கம் அவசியம். சரியான தூக்கம் இல்லை எனில் உடல்சோர்வு ஏற்பட்டு படிப்பில் கவனம் சிதறும். எனவே, போதிய ஓய்வு கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வினா வங்கி: இதற்கு முந்தைய பொதுத்தேர்வு வினாத்தாள்களை இணையதளங்களில் இருந்தோ நண்பர்களிடமிருந்தோ சேகரித்து அதற்கான விடைக் குறிப்புகளைத் தயார் செய்து படிப்பது தேர்வை எதிர்கொள்ள உரிய மனப் பலத்தைத் தரும். நாளிதழ்களில் வெளிவரும் வினா வங்கிகளையும் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாடம் கடினமாக இருக்கலாம். எந்தப் பாடம் உங்களுக்குக் கடினமானது என்று நினைக்கிறீர்களோ அதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதே நேரத்தில் எளிதான பாடம் என்று எதையும் அலட்சியப்படுத்திவிடவும் கூடாது. எல்லாப் பாடங்களுக்கும் சமமான நேரங்களையே கால அட்டவணையில் ஒதுக்குவது சிறந்தது.

எழுத்துப் பயிற்சி: நாம் எவ்வளவு படித்தாலும் தேர்வை எழுதித்தான் எதிர்கொள்ள வேண்டும். எனவே, அதற்கான பயிற்சியை ஒவ்வொரு நாளும் மேற்கொள்வது அவசியம். ஒவ்வொரு வினாக்களையும் படித்த பின்பு அதனை எழுதிப் பார்ப்பது சிறந்த பயிற்சியாக அமையும். எழுதுவதற்குச் சோம்பல்படும் நிலை பரவலாக மாணவர்களிடம் காணப்படுகிறது. இது முற்றிலும் மாற்றிக் கொள்ள வேண்டிய போக்கு. தயங்காமல் அன்றாடம் எழுதிக் கொண்டிருந்தால் தேர்வு எழுதுவது என்பது மிகவும் இலகுவாகிவிடும். எழுதிப் பார்ப்பதற்கு என்று விலை மலிவான குறிப்பேடுகளும் தாள்களும் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேண்டாம் தேர்வு பயம்: தேர்வு நேரத்தில் பெரும்பாலான மாணவர்கள் மனப் பதற்றத்திற்கு உள்ளாகிறார்கள். திட்டமிட்டுப் படிக்க தொடங்கிவிட்டால் அந்தத் தேவையற்ற பதற்றம் நம்மை நெருங்காது. ஒரு மாணவர் தேர்வு அட்டவணையை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது அச்சத்தை ஒரு பாடல் மூலமாக வெளிப்படுத்தி இருந்தார். இது நகைச்சுவைக்காகவா அல்லது அந்த மாணவரின் மனநிலையை வெளிப்படுத்துவதா? என்பது அவருக்கே வெளிச்சம். நாம் படித்ததெல்லாம் நினைவுக்கு வருமா, வினாக்கள் எளிதாக அமையுமா? என்பன போன்ற அச்சங்கள் தேவையில்லை. திட்டமிட்டுத் தேர்வுக்குத் தயார் செய்தால் தேர்வை மிக எளிதாக எதிர்கொள்ளலாம். சுமாராகக் கற்கும் மாணவர்கள் கூட பொதுத்தேர்வைச் சுலபமாக எதிர்கொள்ள திட்டமிடல் கை கொடுக்கும். இப்போதிருந்தே திட்டமிட்டு தேர்வுக்கு தயாராகுங்கள் மிக எளிதாக தேர்வை எழுதி அனைவரும் வெற்றி பெறலாம். நல்வாழ்த்துகள்!