இதயத் துடிப்பில் சில வேறுபாடுகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை: அப்போலோ மருத்துவமனை தகவல்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமுடன் உள்ளதால் இரண்டு நாட்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலை சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 4 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் இதயத்தில் எந்த ஒரு அடைப்பும் இல்லை என தெரியவந்துள்ளது. முதல்வர் தற்போது நலமுடன் உள்ளார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவது குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பார்கள். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது, பெரிய பிரச்னை எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார் என அப்போலோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்னை தொடர்பாக அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத் துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்காக இன்று (நேற்று) காலை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று (நேற்று) மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதல்வர் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.