Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெருநாய் பிரச்னையை தீர்ப்பது மிக சுலபம்: சென்னை விமானநிலையத்தில் கமல்ஹாசன் எம்பி பேட்டி

மீனம்பாக்கம்: தெருநாய்களின் பிரச்னையைத் தீர்ப்பது மிக சுலபம் என்று மக்கள் நீதி மய்யத் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் கூறினார். சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 10 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக மக்கள் நீதி மய்யத் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் துபாய்க்குப் புறப்பட்டு சென்றார். முன்னதாக, சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: துபாயில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க செல்கிறேன். நான் நடித்த தெலுங்கு படத்துக்கு விருது கிடைத்துள்ளது. அவ்விருதை பெற்றுக் கொள்கிறேன்.

பின்னர் எனது துபாய் பயணத்தை முடித்துவிட்டு, குடியரசு துணை தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக டெல்லி செல்லவிருக்கிறேன். பீகாரில் வாக்காளர் பட்டியல் குளறுபடி பிரச்னையில், பிரதமரின் தாயை அவமதிக்கும் வகையில் பேசியதாக கேள்விப்பட்டேன். இங்கு யாரையும் அவமானப்படுத்துவது போல் யாருக்கும் பேசவேண்டிய அவசியமில்லை. வாக்காளர் பட்டியலில் எனது பெயரே சில சமயம் காணாமல் போய், பின்னர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இது சாதாரண விஷயம்தான். இப்போது அதன் உச்சகட்டமாக ஒரு விஷயம் நடந்துள்ளது.

மேலும், இந்தியாவில் வெறிநாய் தொல்லை அதிகரிக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது மிக சுலபம். விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், எங்கே கழுதையை காணோம் என கவலைப்படுகிறார்களா? தற்போது நமக்காக பொதிகள் சுமந்து வந்த கழுதைகள் காணாமல் போய்விட்டன. இப்போது எங்குமே கழுதைகளைப் பார்க்க முடியாது. அவற்றை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது பேசுகிறார்களா? எல்லா உயிர்களையும் முடிந்தவரை காப்பாற்ற வேண்டும் என்பது என் கருத்து.

வெளிநாட்டு பயணத்தில் தமிழக முதல்வர் இதுவரை 3 ஆயிரம் கோடி முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்த்துள்ளார். இதுகுறித்து பாஜ விமர்சிக்கிறது. ஒருவர் நல்லது செய்தால், அவர் எதிர்க்கட்சி உள்பட எந்த கட்சியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். தமிழ்நாட்டுக்கு முதல்வர் நன்மை செய்திருக்கிறார். அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். நாளை பாஜக செய்தால், அதையும் நாம் ஏற்றுக் கொள்ளலாம். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு குறித்து நான் மிகப்பெரிய கட்டுரை எழுதியிருக்கிறேன். அதற்குமேல் இவ்விஷயத்தைக் கூறி, நான் எழுதிய கட்டுரையை நானே குழப்பி விடக்கூடாது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.