Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழை தொடக்கம் பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்கு உபகரணங்களுடன் வீரர்கள் தயார்

*பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை

தர்மபுரி : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட, உபகரணங்களுடன் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய 6 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் அம்பிகா, நிலைய அலுவலர்கள் மற்றும் 100 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் நபர்களை மீட்க மோட்டார் வசதியுடன் கூடிய ரப்பர் படகு உள்ளது. ஓ பிளாஞ்சர் (ரவுண்ட் பிளாஸ்டிக் மிதவை), லைப் ஜாக்கெட், ரோப், அஸ்கா லைட் (இரவு நேரங்களில் 500 அடி தூரம் லைட் வெளிச்சம் தரும்) உள்ளிட்ட மீட்பு பணிக்கான 100க்கும் மேற்பட்ட சிறப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

தர்மபுரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு கடந்த 10 மாதத்தில், 3 ஆயிரத்திற்கும் மீட்பு அழைப்புகள் வந்துள்ளன. நீர்நிலைகள் மற்றும் கிணற்றில் சிக்கியவர்களையும், கால்நடைகள், பாம்பு உள்ளிட்டவைகளை மீட்க உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சிக்கியவர்கள், நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தவர்கள் என 30க்கும் மேற்பட்ட நபர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இதே போல், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் மீட்பு மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தலா 100 முதல் 150 மீட்பு அழைப்புகள் கடந்த 10 மாதத்தில் வந்துள்ளன.

பேரிடர் காலங்களில் மீட்பு குறித்தும், தீ விபத்து தடுப்பு குறித்தும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். இதுவரை 158க்கும் மேற்பட்ட இடங்களில் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதையொட்டி, நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை ஆகிய துறைகளின் சார்பில், பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.

இந்நிகழ்ச்சியில், பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து விளக்கினர். எதிர்பாராதவிதமாக ஏற்படும் தீ விபத்துகளை அணைப்பது குறித்தும், பேரிடர் காலங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான மர அறுவை இயந்திரங்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்கான அதிநவீன இரும்பு கம்பிகளை துண்டிக்கும் கருவிகள், நீரில் மூழ்கியவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான ஜாக்கெட்டுகள், அதிநவீன பைபர் படகுகள் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

புயல், மழை, வெள்ளம், தீ விபத்து, விபத்து போன்ற பேரிடர் காலங்களில் எதிர்பாராத விதமாக சிக்கி கொள்பவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்தும், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் குறித்த செயல்விளக்கமும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்புபணி வீரர்களால் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கலெக்டர் சதீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் அம்பிகா, ஆர்டிஓ காயத்ரி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.