சமூக வலைதளங்களை முடக்கி வருகின்றனர் வார் ரூம் மூலம் ராமதாசை முடக்க அன்புமணி முயற்சி: பாமக பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையது மன்சூர்உசேன், முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியே வந்த பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: பாமகவிலிருந்து ராமதாசால் நீக்கப்பட்டவர் பாலு. அவர் உறுப்பினரே கிடையாது. மற்றவர்களை குறை சொல்ல அவர் யார்?. நாங்கள் அனைவரும் ராமதாசால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள். அருள் எம்எல்ஏ மாம்பழம் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். அவர்தான் ராமதாசின் விசுவாசி.
ஆனால் பாலு தொடர்ச்சியாக ராமதாசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மேலும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஒன்றிணைந்தால் மட்டும்தான் எங்களுக்கு பொறுப்பு வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் பேசினார். ஆனால் தற்போது இளைஞர் சங்க தலைவர் பதவியை பெற்றுள்ளார். அவர் உண்மையான தொண்டர் கிடையாது. ராமதாசை எதிர்த்து யாரும் அரசியல் பண்ண முடியாது. ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்தவுடன் உடனடியாக நாங்கள் அவரைப் பார்த்தோம். அன்புமணி தரப்பு அதர்வாளர்கள் யாரும் வரவில்லை.
எங்களை தொலைச்சிடுவோம் என்று அன்புமணி கூறியது மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. அவர் செய்ய வேண்டிய வேலையை நாங்கள் செய்து வருகிறோம். அன்புமணி இருக்கக்கூடிய பனையூரில் வார் ரூம் ஒன்று உள்ளது. ராமதாஸ் கொடுக்கும் அறிக்கையை பொதுமக்கள் பார்க்க முடியாத அளவுக்கு அந்த ரூமில் ஆட்களை வைத்து செயல்பட்டு வருகின்றனர். ராமதாசின் முக்கிய சமூக வலைதளங்களை முடக்கி வருகின்றனர். புதியதாக உருவாக்கப்பட்ட பேஸ்புக் அக்கவுண்டை அன்புமணி ஆதரவாளர்கள் முடக்கி உள்ளனர். உடனடியாக அதனை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.