சமூக நல்லிணக்கம் என்ற போர்வையில் வந்தே மாதரத்தை துண்டு துண்டாக்கியது காங். மக்களவை விவாதத்தில் பிரதமர் மோடி தாக்கு
புதுடெல்லி: ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலின் 150ம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக, மக்களவையில் வந்தே மாதரம் குறித்த விவாதம் நேற்று நடந்தது. விவாதத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
ஆங்கிலேயர் ஆட்சியில் ‘காட் சேவ் தி குயின்’ என்ற பாடலை இந்திய தேசிய கீதமாக மாற்ற பெரும் பிரசாரம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், 1857ம் ஆண்டு வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் வந்தே மாதரம் மிகவும் பிரபலமடைந்தது. இதனால் இப்பாடலுக்கு ஆங்கிலேயர்கள் தடை விதித்தனர்.
சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரம் என்ற மந்திரம் முழு நாட்டிற்கும் உத்வேகத்தையும் சக்தியையும் அளித்தது. இன்று புனிதமான வந்தே மாதரத்தை நினைவு கூர்வது இந்த அவையில் நம் அனைவருக்கும் கிடைத்த பெரிய பாக்கியம். வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நாம் காண்கிறோம் என்பது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம். 1905ம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக்க வேண்டுமென மகாத்மா காந்தி விரும்பினார். இவ்வளவு பிரபலமாக இருந்த வந்தே மாதரத்திற்கு ஏன் அநீதி இழைக்கப்பட்டது.
கடந்த நூற்றாண்டில் அதற்கு ஏன் துரோகம் செய்யப்பட்டது. வந்தே மாதரம் குறித்த மகாத்மா காந்தியின் விருப்பங்களை நிறைவேற்ற விடாமல் தடுத்த சக்திகள் எவை? வந்தே மாதரம் பாடலை முகமது அலி ஜின்னா விரும்பவில்லை. அதை எதிர்த்து போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்திற்குப் பிறகு முன்னாள் பிரதமர் நேரு, சுபாஷ் சந்திர போசுக்கு கடிதம் எழுதினார். அதில், நேரு பாடலின் பின்னணியைப் படித்ததாகவும், அது முஸ்லிம்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டக்கூடும் என்றும் கூறினார். பின்னர் வந்தே மாதரத்தின் பயன்பாட்டை மறுபரிசீலனை செய்ய காங்கிரஸ் ஒரு அமர்வைக் கூட்டியது. அக்டோபர் 26ல் வந்தே மாதரத்தில் அவர்கள் சமரசம் செய்து கொண்டனர். சமூக நல்லிணக்கம் என்ற போர்வையில் அதை துண்டு துண்டாக உடைத்தனர்.
இது காங்கிரசின் திருப்திபடுத்தும் அரசியலுக்கான முயற்சி. திருப்தி அரசியலின் அழுத்தத்தின் கீழ், காங்கிரஸ் வந்தே மாதரத்தைப் பிரிக்க ஒப்புக்கொண்டது. முஸ்லிம் லீக்கின் முன் காங்கிரஸ் மண்டியிட்டு, அதன் அழுத்தத்தின் கீழ் இதைச் செய்தது என்பதற்கு வரலாறு ஒரு சான்று. இது காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. வந்தே மாதரம் பிரிவினைக்கு அது தலைவணங்கியதால், பின்னர் இந்தியாவின் பிரிவினைக்கும் தலைவணங்கியது. காங்கிரஸ் இன்றும் அதே திருப்திப்படுத்தும் அரசியலைப் கடைபிடித்து வருகிறது.
வந்தே மாதரம் 100 ஆண்டுகளைக் கடந்த போது, அவசரநிலையால் நாடு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது. அந்த சமயம், அரசியலமைப்பு சட்டம் நெரிக்கப்பட்டது. தேச பக்திக்காக வாழ்ந்தவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். அவசரநிலை நமது வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம். இப்போது வந்தே மாதரத்தின் மகத்துவத்தை மீட்டெடுக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை கடந்து செல்ல அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். நேரு குறித்து பிரதமர் மோடி பேசிய போது காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். ‘வெட்கக்கேடு’ என கோஷமிட்டு கண்டனம் தெரிவித்தனர்.
* அடுத்த குறி மேற்கு வங்கம்
வந்தே மாதரத்தின் 150ம் ஆண்டு விழா கொண்டாட்ட விவாதத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று அவைக்கு வந்த போது பாஜ எம்பிக்கள் பலத்த கரகோஷத்துடன், ‘‘நாம் பீகாரில் வெற்றி பெற்றோம். அடுத்த குறி மேற்கு வங்கம்’’ என முழக்கமிட்டனர். மேற்கு வங்கத்தில் 2026ல் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
* சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காதவர்களுக்கு எப்படி புரியும்? அகிலேஷ்
விவாதத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘‘தற்போதைய அரசு எல்லாவற்றையும் சொந்தமாக்க விரும்புகிறது. வந்தே மாதரம் என்பது வெறும் பெருமையோ, அரசியல் ஆயுதமோ அல்ல. சுதந்திரப் போராட்டத்தில் ஒருபோதும் பங்கேற்காதவர்கள் வந்தே மாதரத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேசிய பாடலை ஒருவரின் நம்பிக்கையை மற்றொருவர் மீது திணிக்க பயன்படுத்தக் கூடாது’’ என்றார்.
* மோடி உரையை புறக்கணித்த ராகுல், பிரியங்கா
பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘‘வந்தே மாதரம் விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியும் சபையில் இல்லாததற்கு குற்ற உணர்ச்சியே காரணம். தனது சொந்த குடும்பத்தினர் வந்தே மாதரத்தை ஏமாற்றி துரோகம் செய்ததால் குற்ற உணர்ச்சியின் காரணமாக அவர்கள் வரவில்லை’’ என்றார்.
* பிரதமர் மோடிக்கு திரிணாமுல் எதிர்ப்பு
வந்தே மாதரம் பாடலை எழுதிய மேற்கு வங்கத்தை சேர்ந்த பங்கிம் சந்திர சாட்டர்ஜியை பிரதமர் மோடி குறிப்பிடும் போது ‘பங்கிம் டா’ என்றார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதனால் பிரதமர் மோடி தன்னை திருத்திக் கொண்டு ‘பங்கிம் பாபு’ என குறிப்பிட்டார்.
* மே.வங்க தேர்தலுக்காக திசை திருப்பும் முயற்சி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விவாதத்தில் பேசியதாவது: நீங்கள் நேருவைப் பற்றி தொடர்ந்து பேசி வருவதால், ஒரு காரியத்தைச் செய்வோம். அவருக்கு எதிரான அனைத்து அவமதிப்புகளையும் பட்டியலிடுவோம். அதைப் பற்றி விவாதம் நடத்தி மொத்தமாக முடித்து விடுவோம். பின்னர் இன்றைய பிரச்னைகளான விலைவாசி உயர்வு, வேலையின்மை பற்றி பேசலாம். வந்தே மாதரத்தைப் பற்றி நாம் பேசும் போது, அது நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றை நினைவூட்டுகிறது. இந்த பாடல் மக்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ள நிலையில், இந்த விவாதத்தின் அவசியம் என்ன? நமது நோக்கம் என்ன? பொறுப்பு என்ன? அதை எவ்வாறு நிறைவேற்றுகிறோம் என்பதை பற்றி விவாதிக்கலாம். தேசியப் பாடல் குறித்து நாம் ஏன் விவாதம் நடத்துகிறோம்? அதில் என்ன விவாதம் இருக்க முடியும்?
அதற்கு சில காரணங்கள் உள்ளன. முதல் காரணம், மேற்கு வங்க தேர்தல் வரவிருக்கும் நிலையில், மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த விவாதத்தை நடத்துகிறோம். 2வது காரணம், நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் மற்றும் நாட்டிற்காக மகத்தான தியாகங்களைச் செய்தவர்கள் மீது புதிய குற்றச்சாட்டுகளை முன்வைக்க அரசு விரும்புகிறது. இந்த அரசு நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்க விரும்பாததால், கடந்த காலத்தை நாம் தொடர்ந்து ஆராய வேண்டும் என்று விரும்புகிறது. பிரதமர் மோடி முன்பு இருந்த மோடி அல்ல.
இது, அவரது தன்னம்பிக்கை குறைந்து வருவதையும், அவரது கொள்கைகள் நாட்டை பலவீனப்படுத்துவதையும் காட்டுகிறது. நேருவுக்கும் போஸுக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றத்தை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் திருப்திப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி கூறும் குற்றச்சாட்டு உண்மையல்ல. வந்தே மாதரத்தின் முதல் 2 சரணங்களை தேசியப் பாடலாக ஏற்ற முடிவைக் கேள்வி கேட்பது அரசியலமைப்புச் சபையையும் அதன் உறுப்பினர்களையும் கேள்வி கேட்பதற்குச் சமம். மோடி சுமார் 12 ஆண்டுகள் பிரதமராக இருந்தார், நேரு 12 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.
* பிரிவினையை ஏற்படுத்தியது யார்?
விவாதத்தில் திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில், ‘‘பிரதமர் மோடியின் பேச்சை கேட்ட பிறகு, வந்தே மாதரத்தின் உண்மையான கனவு என்ன என்ற கேள்வி எனக்குள் எழுந்துள்ளது. வந்தே மாதரம் மீதான விமர்சனம் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே இருந்து வருகிறது. இப்பாடல் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் எதிரானது என்று நம்புவதற்கு அல்லது முடிவு செய்வதற்கு காரணங்கள் உள்ளன. வரலாற்றாசிரியர் ஆர்.சி.மஜும்தார், ‘‘பங்கிம் சந்திரா தேசபக்தியை மதமாகவும், மதத்தை தேசபக்தியாகவும் மாற்றினார்’’ என்றார்.
1907ம் ஆண்டில், முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடக்கூடாது என்றும், சுதேசி இயக்கத்தில் சேரக்கூடாது என்றும் சிவப்பு நிற காகிதத்தில் அச்சிடப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கூட இந்த விவகாரத்தை விவாதித்தது. அந்த விவாதங்களின்படி, வந்தே மாதரம் இந்துக்களுக்கானது மட்டுமே என்று கூறியவர்களும், முஸ்லிம்கள் சுதந்திர போராட்டத்தில் சேர தடை விதித்தவர்களும் காரணம் என கூறப்பட்டது. எனவே, பிரிவினை முஸ்லிம்களால் அல்ல, உங்கள் முன்னோர்களால் செய்யப்பட்டது’’ என்றார்.
* மக்களின் துயரத்தை பேசாத பிரதமர் மோடி
மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் பேசுகையில், ‘‘வந்தே மாதரம் பாடலுக்கு முக்கியத்துவம் அளித்து அதைத் தேசியப் பாடலாக மாற்றியது காங்கிரஸ் கட்சிதான். பிரதமர் எப்போது பேசினாலும் முன்னாள் பிரதமர் நேருவின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சிக்கிறார். ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்போது நேருவின் பெயர் 14 முறையும், காங்கிரசின் பெயரை 50 முறையும், அரசியலமைப்பின் 75வது ஆண்டு நிறைவு விவாதத்தின்போது நேருவின் பெயர் 10 முறையும், காங்கிரசின் பெயர் 26 முறையும், 2022 ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேருவின் பெயரை 15 முறையும், 2020 விவாதத்தில் நேருவின் பெயரை 20 முறையும் குறிப்பிட்டார். நீங்கள் எவ்வளவு முயன்றாலும் நேருவின் பங்களிப்புகளில் ஒரு கறுப்புப் புள்ளியைக் கூட உங்களால் வைக்க முடியாது. இந்திய மக்கள் அவதிப்படுகிறார்கள், அதைப் பற்றி எந்தக் குறிப்பும் பிரதமர் மோடி பேச்சில் இல்லை. டெல்லியலோ, பகல்காமிலோ குடிமக்களை பாதுகாக்க முடியவில்லை. மக்கள் சுவாசிக்க முடியாமல் தவிக்கிறார்கள்’’ என்றார்.


