Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டில் ரூ.8 கோடியை வீணடித்த 9 சமூக நலவாரியங்கள்: தலைவர்களுக்கு சொகுசு வசதி அளித்த அவலம்

போபால்: மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 9 சமூக நலவாரியங்கள் எவ்வித மக்கள் பணியும் ஆற்றாமல் கோடிக்கணக்கில் பணத்தை வீணடித்தது சட்டசபையில் தெரியவந்துள்ளது. தற்போது பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் கடந்த 2023ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு சமூகத்தினருக்காக 9 நலவாரியங்கள் அவசரமாக அமைக்கப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் கலைக்கப்பட்ட இந்த வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் பிரதாப் கிரேவால் எழுப்பிய கேள்விக்கு, மாநில அரசு அளித்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வாரியங்கள் எவ்வித உருப்படியான பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்றும், ஒரு பயனாளியைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இதற்காக ஒதுக்கப்பட்ட 8.34 கோடி ரூபாய் நிதியில், வாரியத் தலைவர்களுக்கு அமைச்சர் அந்தஸ்திலான சலுகைகள், அரசு வாகனங்கள் மற்றும் இதர படிகள் மட்டுமே வாரி வழங்கப்பட்டுள்ளன. ஒன்பது வாரியங்களில் மூன்று வாரியங்கள் மாநில அளவில் ஒரு கூட்டத்தைக் கூடக் கூட்டவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது. வாரியங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாததால் இளைஞர்களுக்கோ அல்லது வேலையற்றவர்களுக்கோ எவ்வித உதவியும் போய்ச் சேரவில்லை. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘தேர்தலின் போது குறிப்பிட்ட சமூகத்தினரைக் கவருவதற்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் மட்டுமே இந்த வாரியங்கள் உருவாக்கப்பட்டன; தலைவர்களுக்குப் பதவி வழங்கித் திருப்திப்படுத்துவதே இதன் நோக்கம்’ என்று எதிர்க்கட்சியினர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் நிதி முறைகேடு நடந்ததாகக் கணக்குத் தணிக்கைத் துறை (சிஏஜி) சுட்டிக்காட்டியிருந்த நிலையில், தற்போது மேலும் 9 வாரியங்களின் செயலற்றத் தன்மை வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.