Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சம்பாதிப்பதைக் காட்டிக் கொடுக்கும் சோஷியல் மீடியாக்கள்: வலைதளத்தில் விரியும் வலை: பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்ஆப்பை ஆய்வு செய்ய அனுமதி கேட்கும் ஒன்றிய பாஜ அரசு

* அடுத்த ஆண்டு அமலாகும் புதிய வருமான வரிச் சட்டத்தில் மறைந்திருக்கும் அபாயம்

புது கார் எப்படி இருக்கு...’, ‘‘நேத்து வாங்கின நகை. புது டிசைன்...’’, ‘‘குடும்பத்துடன் துபாய் டூர்’’ என கார் வாங்கியது முதல் கத்தரிக்காய் சமைத்தது வரை லைக்ஸ் அள்ளுவதற்காக சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுவதில்தான் பலரது அன்றாடம் கழிகிறது. போஸ்ட்டுக்கு லைக்ஸ் வருகிறதோ இல்லையோ, வருமான வரி ரெய்டு நிச்சயம் என்ற பீதியைக் கிளப்பியிருக்கிறது, புதிய வருமான வரிச்சட்டத்தில் ஒன்றிய பாஜ அரசு இணைத்திருக்கும் புதிய விதிகள்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக உரையாற்றிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘வாட்ஸ் ஆப் தகவல்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் வருமான வரித்துறைக்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்து வரித்துறை செயல்படுவதை இவை உறுதி செய்கின்றன.எனவே, புதிய வருமான வரிச் சட்டம் பொதுமக்களின் இ-மெயில், வாட்ஸ்அப் , பேஸ்புக், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களை ஆய்வு செய்து, நிதிப் பரிவர்த்தனைகள் மறைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்குகிறது.

இதுபோல், வணிக பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் சாப்ட்வேர்கள், சர்வர்களை ஆய்வு செய்யும் உரிமையையும் அளிக்கிறது. எந்த அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு நடந்திருக்கிறது என்பதை நிரூபிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சான்றாவணமாகப் பயன்படுத்தப்படுகிறது’’, என்றார். கணக்கில் வராத பணத்தை மறைத்து வைக்க அடிக்கடி செல்லும் இடங்களை கூகுள் மேப் பதிவுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் உள்ள பதிவுகள் மூலம், பினாமி சொத்து உரிமையாளர்களின் விவரங்கள் தெரிய வந்தன. இதுபோன்ற நடவடிக்கைகள், வருமான வரி நடவடிக்கைகள் புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படுவதை உறுதி செய்கின்றன. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி கிரிப்டோ கரன்சி விவரங்களும் சமூக வலைதளங்களை ஆய்வு செய்ததன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இ-மெயில்,பேஸ்புக், பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், எக்ஸ், டெலிகிராம், யூடியூப், வாட்ஸ் ஆப், வைபர், வீ சாட், சிக்னல், லைன், ஹேங்க் அவுட், த்ரெட் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் பிரபலமான மற்றும் பிரபலமற்ற அனைத்து சமூக வலைதளங்கள், தகவல் பரிமாற்றத் தளங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1961ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு அமலில் உள்ள வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஒரு தனிநபர் வெளியிடப்படாத வருமானம் அல்லது சொத்து வைத்திருப்பதாக நம்புவதற்கு காரணம் இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அனுமதியோடு சோதனை நடத்தலாம். ஆனால், இந்த புதிய மசோதா மேற்கண்ட வலைதளங்கள் மற்றும் கணினி உள்ளிட்ட டிஜிட்டல் அமைப்புகளை நேரடியாக அணுகுவதற்கு வழி வகுக்கின்றன. அதாவது,

* வாட்ஸ் ஆப், டெலிகிராம் இ-மெயில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய புதிய சட்டம் அதிகாரம் வழங்குகிறது.

* நிதிப்பரிவர்த்தனைக்காக வணிகர்கள், தனிநபர்கள் பயன்படுத்தும் மென்பொருள்கள் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் போன்றவற்றை வரி அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்யலாம்.

* கிரிப்டோ உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை கண்காணிக்கலாம்.

* ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கண்ட அனைத்தையும் ஆய்வு செய்து வருமான வரித்துறையினர் மிக எளிதாக வருவாய் விவரங்களை கண்டுபிடித்து விட முடியும்.

ஏற்கெனவே வரி ஏய்ப்புக்கு சாத்தியமுள்ள வழக்குகளில் விவரங்களை உறுதி செய்ய, வருமான வரித்துறை அதிகாரிகள் சமூக ஊடகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தரவுகளை அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், வரி வசூலை அதிகரிக்க ரெய்டுகள் நடத்துவதற்கு சோஷியல் மீடியா பதிவுகள் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது. ஏனெனில், சமூக வலைதளங்கள் பலரின் அன்றாட வாழ்க்கை முறையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றன.

பலரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை தினமும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கின்றனர். புதிதாக வாங்கிய கார், பைக், அணிகலன்கள், காலணி, வீடு இன்டீரியர், வீட்டு உபயோகப் பொருட்கள், நவீன வசதிகள் குறித்து போஸ்ட் போடுகின்றனர். லைக்ஸ்களை அள்ளுவதற்கு போடப்படும் இவை, பார்வையாளர்களை ஈர்ப்பதற்குப் பதில் வருமான வரித்துறையினர் கண்ணை உறுத்துவதாக அமைந்து விடும் என்ற அச்சம் இப்போதே சிலரை ஆட்கொள்ளத் தொடங்கி விட்டது.

எனவே, கீழ்க்காணும் வகையில் சமூக வலைத்தள பதிவுகள் வருமான வரித்துறையினரால் வரி ஏய்ப்பைக் கண்டறியவும், வரி வசூலிக்கும் கருவியாகப் பயன்படுத்தவும் ஏதுவாகும் என்கின்றனர் கணக்குத் தணிக்கையாளர்கள். எப்படியோ, வரி வசூலிப்பை அதிகரிப்பதிலேயே படு தீவிரம் காட்டும் ஒன்றிய பாஜ அரசின் நடவடிக்கை, சாமானிய மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு, சாதாரண பேஸ்புக் போஸ்டுளை வைத்தே ரெய்டுக்கு வழி வகுத்து விடலாம் என்ற அச்சம் பலரிடையே காணப்படுகிறது.

* டிஜிட்டல் தடயங்கள்

தனிநபர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கை முறை, கொள்முதல், பயணங்கள் அல்லது வணிக நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த நபர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது, படிவத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ள வருமானத்திற்கும் உண்மையான வாழ்க்கை முறை அல்லது செலவினங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளைக் கண்டறிய வரி அதிகாரிகள் இந்தத் தரவை சாத்தியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.

பிரபலங்கள் குறிவைக்கப்படுவார்கள்: சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்தல், அரசுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுதல், விமர்சித்தலில் ஈடுபட்ட பலர் மீது ரெய்டுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய பிரபலங்களின் வாழ்க்கை முறை, செலவுகளை அவர்களின் சமூக வலைத்தள பதிவுகள் மூலம் கண்டறிந்து வருமான வரி ரெய்டுகள் நடத்தவும், ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பவர்களின் விற்பனை விவரங்களையும் அறிய சமூக வலைதளங்களைப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

விற்பனை: ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்டுள்ள வணிகர்கள், தனிநபர்கள் பலர் சமூக வலைதளங்களை பொருட்கள் விற்பதற்கான வாய்ப்பாகவும், விளம்பரத்துக்கான களமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ஆன்லைனில் விற்பனைக்காகப் போடப்படும் பொருட்களுக்கு, கமென்டிலேயே ஆர்டர்கள் வருகின்றன. இதனை வைத்தும் விற்பனை விவரங்களை வரித்துறை அதிகாரிகள் கணிப்பதற்கு வழி வகுக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

* கண்காணிப்பு வளையத்தில் சிக்குவோர் யார்? சமூக வலைதளங்களை பயன்படுத்தும் காரணம்

சமூகவலைதளங்களை பயன்படுத்துவதற்கான காரணத்தில் 41.9 சதவீதம் தங்கள் நண்பர்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவே என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. செய்திகளை படிக்க 32 சதவீத பயன்பாடு உள்ளது. 19.9 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கை தரம், நடைமுறைகள் குறித்து போஸ்ட் போடுகின்றனர். இவர்கள் வருமான வரித்துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் வர வாய்ப்புகள் நிறைய உள்ளன என கூறப்படுகிறது.

* இந்தியாவில் சமூக வலைதள பயன்பாடு

சமீபத்தில், தனியார் அமைப்பு ஒன்று வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, இந்தியாவில் சமூக வலைதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 49.1 கோடி. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சுமார் 6.3 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டின் தற்போதைய உத்தேச மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிட்டால், சுமார் 33.7 சதவீதம் பேர் சமூக வலைதளங்களைப் பார்க்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டின் உலக மக்கள்தொகை ஆய்வறிக்கையின்படி, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும். 146 கோடி மக்கள் தொகையுடன், சீனாவை பின்னுக்குத் தள்ளும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் சமூக வலைதளங்கள், இணையதள பயன்பாடு குறித்த விவரம் வருமாறு:

* எதிர்கொள்ளும் அபாயங்கள்

* இ-மெயில், வாட்ஸ் ஆப் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கண்காணித்து விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.

* வணிகர்கள் தாங்கள் தாக்கல் செய்த ரசீதுகளுடன், அவை தொடர்பான கிளவுடு ஸ்டோரேஜ், மென்பொரும் தரவுகளை வழங்க நேரிடும்.

* தொழில்நுட்ப நிறுவனங்கள், வரி அதிகாரிகள் கோரும் டிஜிட்டல் தரவுகளை சமர்ப்பிக்க அவற்றை பாதுகாத்து வைக்க அறிவுறுத்தப்படலாம்.

* வருவாயை கண்டறிய ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் போன்றவற்றின் மூலம் தனி நபரின் அந்தரங்க விஷயங்கள் பொதுவெளியில் கசியும் அபாயம் நேரிடும்.

* போலி வருமான வரி ரெய்டுகள்

சமீபகாலமாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை பெயரில் மர்ம நபர்கள் அப்பாவிகளைத் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. புதிய சட்டம் அமலுக்கு வந்துவிட்டால், வரித்துறையினருக்கு உள்ள அதிகாரங்களைத் தெரிந்து கொண்டு மர்ம நபர்கள் சமூக வலைதள பதிவுகளை வைத்து சிலரை மிரட்டவும் பணம் பறிக்கவும் வழி வகுத்து விடும். போலி ரெய்டுகள் நடத்தப்படவும் வாய்ப்புகள் உருவாகலாம் என அஞ்சப்படகிறது.