மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த செங்கங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (40). கோட்டூர் ஒன்றியம் கர்ணாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், பல்வேறு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது பதிவிட்டு வருபவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் அவரது உடல்நிலை குறித்தும், பள்ளி கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்தும், அரசுக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நடந்த தீவிர விசாரணைக்கு பின்னர், திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சௌந்திரராஜன், இடைநிலை ஆசிரியர் ரமேஷை சஸ்பெண்ட் செய்து நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார், மேலும், கோட்டூரில் ஆசிரியர் ரமேஷ் தங்கி இருக்க வேண்டுமென உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசு ஊழியராக இருந்து கொண்டு பல்வேறு சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாக வந்த புகாரின் பேரில் கோட்டூர் ஒன்றியத்தில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் ரமேஷின் பணியிடை நீக்கம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.